திருவனந்தபுரம்:கேரளாவில், சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடக்கஉள்ள நிலையில், மாநில முதல்வரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் கைது செய்யப்பட்டு இருப்பது, ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு, பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக பெயரில், கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை, சுங்க துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த வழக்கில், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கேரள முதல்வர், பினராயி விஜயனின் முதன்மைச் செயலராக பதவி வகித்து வந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கருக்கு, குற்றவாளிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரிடம், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சிவசங்கரை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் கைது செய்தனர்.காங்., அழைப்புமுதன்மை ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பதவி வகித்து வந்தவர், ஒரு கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவது, இந்திய அளவில் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. 'இதற்கு பினராயி விஜயன் தார்மீக பொறுப்பேற்று, தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பா.ஜ., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் ராஜினாமா செய்யக்கோரி, மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு, காங்., அழைப்பு விடுத்துள்ளது.பின்னடைவுதிருவனந்தபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லம் நோக்கி, இளைஞர் காங்கிரசார், நேற்று கண்டன பேரணி நடத்தினர்.''சிவசங்கருக்கு, அனைத்து அதிகாரங்களையும், சுதந்திரத்தையும் முதல்வர் வழங்கி இருந்தார். எனவே, அவர் கைதானது, முதல்வர் கைதானதற்கு சமம்,'' என, கேரள காங்., தலைவர், ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கேரள பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான, வி.முரளீதரன் கூறுகையில், ''கேரள மக்களிடம், முதல்வர் மன்னிப்பு கேட்கவேண்டும்,'' என்றார்.முதல்வர் அலுவலகத்தில், வானளாவிய அதிகாரம் பெற்றவராக, சிவசங்கர் வலம் வந்தார். பல முக்கியமான விவகாரங்களில், அவரது ஆலோசனையை பெற்றே, முதல்வர் பினராயி விஜயன் முடிவுகளை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, சிவசங்கர் கைதை, மூத்த அதிகாரிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறி கை கழுவ முடியாத நிலை, ஆளும் கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கேரள சட்டசபை மற்றும் உள்ளாட்சிகளுக்கு, விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நேரத்தில், சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளது, இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கம்யூ., தலைவர் மகன்போதை வழக்கில் கைது
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பிடிபட்ட, போதை மருந்து கும்பலுடன், கேரள மார்க்சிஸ்ட் கம்யூ., செயலர், கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன், பினீஷ் கொடியேறிக்கு தொடர்பு இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, ஏற்கனவே இரண்டு முறை, பினீஷிடம் அமலாக்கத்துறையினர், விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று மூன்றாவது முறையாக, விசாரணைக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது.விசாரணைக்கு ஆஜரான பினீஷை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சிவசங்கருக்கு ஏழு நாள் காவல்
கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கரை, ஐந்தாவது குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. இந்நிலையில், எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், சிவசங்கர் நேற்று காலை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, ஏழு நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE