வீரசோழபுரத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 35 ஏக்கர் நிலத்தை, வருவாய் துறைக்கு விற்பனை செய்வது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அரசின் முடிவுக்கு, ஆன்மிகவாதிகள், ஊர் மக்கள், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் அமைந்துள்ளது, அர்த்தநாரீஸ்வரர் கோவில். 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தை, சித்தர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளனர்.இக்கோவிலுக்கு சொந்தமாக, வீரசோழபுரத்தில், 70 ஏக்கர் நிலமும், வி.பாளையம் கிராமத்தில், 10 ஏக்கர் நிலமும் உள்ளன. கோவில் நிலங்களை குத்தகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வருவாயை வைத்து, மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம், கோவில் பூஜைகள் செய்யப்படுகின்றன.
உறுதி
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உதயமான பின், ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம் கட்ட, பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், வீரசோழபுரத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான, 35 ஏக்கர் புன்செய் நிலமும் அடங்கும். அந்த நிலத்தினை, வருவாய் துறைக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கான அரசாணை, செப்., 19ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதற்கான விளம்பரம், அறநிலைய துறையால் வெளியிடப்பட்டது.
இம்மாதம், 23ம் தேதி, கோவில் நிலத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார்.இதற்கு, ஆன்மிக நல விரும்பிகள், பக்தர்கள், உள்ளூர் மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இது குறித்த ஆட்சேபனை கூட்டம், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலைய துறை தலைமையகத்தில், நடந்தது.
அறநிலைய துறை கமிஷனர் பிரபாகர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், 70க்கும் மேற்பட்ட ஆன்மிக நல விரும்பிகள், பக்தர்கள், உள்ளூர்வாசிகள், பல்வேறு ஹிந்து அமைப்பினர் பங்கேற்று, தங்களின் ஆட்சேபங்களை தெரிவித்தனர்.அதன் விபரம்:
டி.ஆர்.ரமேஷ், ஆலய வழிபடுவோர் சங்கம்:
முதலில், இந்த கோவிலுக்கு அறங்காவலர்கள் இல்லை. அறங்காவலர்கள் இல்லாமல், நிலத்தை விற்பனை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது.தக்கார் என்ற அறநிலைய துறை ஊழியரையும், கருத்தில் கொள்ள முடியாது. தக்கார் என்ற நியமனம், 90 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அறநிலைய துறை கமிஷனர் என்பவர், அறங்காவலர் கொண்டு வரும் நில விற்பனை திட்டத்திற்கு தான் அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால், முன்னர் பதவியில் இருந்த கமிஷனர், இசைவு ஆணை வேண்டு கிறார். இது, முற்றிலும் சட்டப்படி தவறு.பொது நலன் கருதி எனக்கூறி, கோவில் நலத்திற்கு விரோதமாக, எந்த விற்பனையும் செய்ய முடியாது என, உயர் நீதிமன்ற அமர்வு தெளிவான தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும், கோவில் நிலத்திற்கான இழப்பீடு தொகை மிக குறைவாக உள்ளது.
அரசு வழிகாட்டுதலின்படி, கடைசிபட்சமாகத் தான் கோவில் நிலத்தை எடுக்க வேண்டும். வேறு நிலம் கிடைக்கவில்லை என, கலெக்டர் உறுதி செய்து, சான்றிதழ் அளிக்க வேண்டும்.'இந்த நிலம் பயன்பாட்டில் இல்லை' என, அறநிலையத் துறை அறிவிக்க வேண்டும். ஆனால், 40 ஏக்கர் நிலம் பயன்பாட்டிற்கு இல்லை என கூறிவிட முடியாது. எனவே, கோவில் நிலத்தின் விற்பனையை கைவிட வேண்டும்.
துவக்கம்
மனோகர், மாநில செயலர், ஹிந்து முன்னணி:தமிழகத்தில், கோவிலை பாதுகாக்கவே அறநிலைய துறை; கோவில் நிலத்தை விற்பனை செய்வதற்கு இல்லை. அந்த பாரம்பரியமான கோவிலை பராமரிக்க, அறநிலைய துறை தவறி விட்டது.பெரும்பாலான கோவில்களின் செயல் அலுவலர்களே, தக்காராக நியமிக்கப்படுகின்றனர். இதனால், முறைகேடுகள் அதிகரிக்கும். அந்த கோவில் நிலத்தின் மதிப்பு, 200 கோடி ரூபாய், ஆனால், 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்?
ரங்கராஜன், ஆன்மிகவாதி, ஸ்ரீரங்கம்:
கோவில் பெயரில் உள்ள ஒரு நிலத்தில், அத்து மீறி யார் நுழைந்தாலும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். விளம்பரம் கொடுக்கும் முன், அறநிலைய துறை சட்ட விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்; ஆனால், விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படவில்லை.கோவில் நிலத்தை விற்பனை செய்வதை விட, குத்தகைக்கு விட வேண்டும்.
ஆன்மிகவாதிகள் தரப்பில் கூறியதாவது:
கோவில் நிலத்தை விற்பதற்கு முன், அங்கு கட்டுமான பணிகளை துவக்கியது, மிகப் பெரிய தவறு. கோவில் நிலத்தை யாருக்கும் கிரையம் செய்யக்கூடாது.வேறு வழியின்றி விற்பனை செய்தாலும், அதற்கான தொகை கொடுக்காமல், நிலமாக வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.நடவடிக்கைகோவில் நிலத்தை விற்பனை செய்யக்கூடாது என, அறநிலைய துறைக்கு, ஏராளமான பக்தர்கள், ஆன்மிகவாதிகள், 'இ- - மெயில்' வாயிலாக, ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.
கோவில் நிலத்தை விற்பனை செய்ய, அறநிலைய துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், 'லைசன்ஸ்' வாங்கிய திருடனாக, இத்துறை விளங்குகிறது. இந்த ஆட்சேபனை கூட்டத்தை, கோவில் உள்ள ஊரில் நடத்தினால் தான், பக்தர்களின் மன நிலை புரியும்.எனவே, கோவில் நிலத்தை விற்பனை செய்வதை தவிர்த்து, குத்தகைக்கு விடுவது குறித்து யோசிக்க வேண்டும். இக்கோவில் சொத்துக்களை, இணையதளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும், பாரம்பரியமிக்க கோவிலை முழுமையாக பராமரித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கூட்ட முடிவில் பேசிய கமிஷனர் பிரபாகர், ''அனைவரின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
ஆலோசிக்கிறது அரசு?
வீரசோழபுரம், அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், கலெக்டர் அலுவலகம் கட்ட, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது, அரசின் கவனத்திற்கு சென்றதும், அறநிலைய துறை கமிஷனர் பிரபாகரை அழைத்து, முதல்வர் இ.பி.எஸ்., பேசியுள்ளதாக தெரிகிறது. கோவில் நிலத்தை விடுத்து, வேறு இடம் பார்க்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE