ஒரே நாள் இரவில், இன்னென்ன மதிப்பு பணம் செல்லாது என, அறிவித்தது போல, ஒரே நாளில், நாட்டிலேயே ஜாதி கிடையாது என, மத்திய அரசு அறிவிக்கட்டும்; இட ஒதுக்கீடு கேட்டு நாங்கள் போராட மாட்டோம்.
- சீமான்
'ஒரே நாள் இரவில், பிரிவினைவாத கட்சிகளுக்கு தடை என, மத்திய அரசு அறிவித்தால் கூட, நன்றாக தான் இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
தமிழக கவர்னர் ஒரு விசித்திரமானவர். எதில் எல்லாம் தலையிடக் கூடாதோ அதில் எல்லாம் தலையிடுகிறார். எதற்கெல்லாம் ஒப்புதல் வழங்க வேண்டுமோ, அதற்கு எல்லாம் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார்.
- எம்.பி., கார்த்தி சிதம்பரம்
'தமிழக கவர்னர், அடிதடி அரசியல் தெரியாதவர், பண்பானவர், பெரிய பத்திரிகையாளர், நிதானமானவர் என்று தான், நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம்.
அவர்கள் பேசட்டும்; அவதுாறுகளை அள்ளி வீசட்டும். ஆவேசமாக வீசட்டும்; அவர்கள் தரத்தை யார் என காட்டட்டும். அவர்களே தங்களை அம்பலப்படுத்திக் கொள்ளட்டும். நம் கவனம்- மனுநுாலை அம்பலப்படுத்தும் மகத்தான பணியில் மட்டுமே குவியட்டும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

'இந்திய அரசியல் சட்டத்தை தான், இந்திய மக்கள் பின்பற்றுகின்றனர்; நீங்கள் சொல்லும் மனுநுால், கற்பனையானது. கட்சியினரை ஏமாற்றாதீர்கள். நம்பி இருக்கும் அப்பாவி மக்களை திசை திருப்பாதீர்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.
முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து மாநில கவர்னர்களும், மத்திய அரசு ஆட்டுவிக்கும் பொம்மைகளாக உள்ளனர். இப்படியே போனால், நாடு மிக மோசமான நிலைக்குச் சென்று விடும்.
- காங்., மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ்
'நீங்கள் சொல்வது போல இல்லை; எல்லாரும் சுயமாக சிந்திக்கின்றனர்; செயல்படுகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ் பேட்டி.
பண்டிகை காலங்களில், பெரிய நடிகர்களின் படங்களை, அவர்களின் ரசிகர்கள் எதிர்பார்ப்பர். இது, வழக்கமான ஒன்று தான். எந்தச் சூழ்நிலையிலும், அந்த நடிகர்களின் படங்களை வெளியிட அரசு தடையாக இருக்காது.
- அமைச்சர் ராஜு
'பண்டிகை காலத்திற்கும், பெரிய நடிகர்கள் படங்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. பண்டிகை என்பது, உறவினர்களைச் சந்தித்து மகிழ்வதற்கும், கடவுளைக் கும்பிடுவதற்கும், கொண்டாடுவதற்குமே தவிர, சினிமா படம் பார்க்க அல்ல...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக செய்தித் துறை அமைச்சர் ராஜு பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE