கமுதி : ''மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்'' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் பி.டி.அரசகுமார் உடன் வந்திருந்தனர்.
ஸ்டாலின் கூறியதாவது: ''மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு கவர்னரின் கையெழுத்து பெற காலம் கடத்தியதே முதல்வர் பழனிசாமியின் மோசமான ஆட்சிக்கு உதாரணம். இதை கண்டித்து தி.மு.க., சார்பில் போராட்டம் செய்தோம். அதற்கு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் என முதல்வர் கூறுகிறார். அரசியல் செய்யாமல் அவியல் செய்யவா முடியும் என கூறினேன். இப்போதும் அதுவே எனது பதில்.மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டிற்கு அரசாணை பிறப்பித்துள்ளதை வரவேற்கிறேன்.
இதனை இவ்வாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டரீதியாக நீதிமன்றம் சென்றால் அரசாணை செல்லுபடியாகுமா என்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். அதேநேரம் எந்த வகையிலாவது அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி அரசாணையை செயல்படுத்த வேண்டும்,'' இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.முன்னதாக மதுரையில் தேவர் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்தார்.
களத்தில் இறங்குங்கள்
'வரும் சட்டசபை தேர்தலில், நமக்குள்ளே இருக்கும் சிறுமாச்சரியங்களை களைந்து, களத்தில் இறங்குங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கட்சித் தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:
சென்னை, நீலகிரி மாவட்டத்தை தவிர, மற்ற அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடினேன். அதில், 234 சட்டசபை தொகுதிகளில், 210 தொகுதிகளின் கள நிலவரத்தை அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு அமைந்தது.
கடந்த, 10 ஆண்டு காலமாக, அனைத்து தொகுதிகளும் சந்தித்துள்ள சீரழிவுகள், மக்களின் மாறத் துயரம், ஆட்சி மாற்றத்திற்குத் தீர்மானமான மனநிலை அனைத்தும், ஆதாரங்களுடன் அலசப்பட்டிருக்கின்றன. மாபெரும், மகத்தான வெற்றியை, தி.மு.க.,விற்கும், அதன் கூட்டணிக்கும் வழங்குவதற்கு, தமிழக மக்கள் ஆயத்தமாகவே உள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில், மாபெரும் வெற்றியை தரும் என்ற உறுதியையும் வழங்கினர். சதிகார அதிகாரக் கூட்டத்தை வெல்லும் ஆற்றல் பெற்றது, கருணாநிதியின் லட்சியப் படை.
நீர் அடித்து நீர் விலகாது என்பது போல, நமக்குள்ளான சிறுமாச்சரியங்களையும் களைந்து, களத்தில் இறங்குங்கள். உழைப்பெனும் நீர்வார்த்து, உன்னத வெற்றியை காண்போம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE