அடுத்த ஐந்து நிதியாண்டுகளுக்கான, அனைத்து ஆலோசனை களையும், 15வது நிதிக்குழு, நிறைவு செய்துவிட்ட நிலையில், இதற்கான இறுதி அறிக்கை, விரைவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரை
அரசியலமைப்பு சட்டத்தின், 280வது பிரிவின் கீழ், ஜனாதிபதியால் அமைக்கப்படும் அமைப்பு, நிதிக்குழு.ஐந்து ஆண்டுகளை ஆயுட்காலமாக உடைய இந்த குழு, மத்திய மாநில அரசுகளிடையே, நிதி நிர்வாகம் தொடர்பான முக்கிய பங்கை வகிக்கிறது.மத்திய அரசு, தான் விதிக்கும் வரிகளை வசூலிக்கும்போது, அவற்றை மாநில அரசு களுடன் இணைந்து, எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும், இந்த குழு தான் பரிந்துரை செய்யும்.
மத்திய தொகுப்பில்இருந்து, மானியங்கள் அல்லது மாநிலங்களுக்கான சிறப்பு நிதி போன்ற வற்றை வழங்குவதற்கு தேவையான விதிமுறைகளையும், இந்த குழு தான் வகுக்கும்.தற்போது செயல்பட்டு வரும், 15வது நிதிக்குழு, பல மாதங்களாகவே மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், பல துறை நிபுணர்கள் என, அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வந்தது. இறுதியாக, நேற்று டில்லியில் கூடிய இந்த குழு, அடுத்த ஐந்து நிதியாண்டுகளுக்கு மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து ஆலோசனைகளையும், நிறைவு செய்ததாக அறிவித்தது.
இறுதி அறிக்கை
ஆலோசனைகளின் அடிப்படையில், 15வது நிதிக்குழு தயாரித்துள்ள அறிக்கையில், அதன் தலைவர், என்.கே.சிங் மற்றும் அதன் உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.இந்த அறிக்கை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரும், 9ம் தேதி சமர்ப்பிக்க வேண்டுமென, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.சில நடைமுறை காரணங்களுக்காக, இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க, ஜனாதிபதியிடம் கூடுதல் அவகாசம் கேட்கவும், இந்த குழு திட்டமிட்டு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. - நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE