புதுடில்லி: கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கும்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவில் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, உட்பட பல நாடுகள், கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பரிசோதனை
நம் நாட்டில், மூன்று நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. இதற்கான இறுதிக் கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன.கொரோனா தடுப்பூசிக்காக, மத்திய அரசு, 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தடுப்பு மருந்தை, மத்திய அரசே கொள்முதல் செய்து, அதை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில், கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, இப்போதே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசியை முதலில் போடுவவதற்காக, முன்னுரிமை பயனாளிகள் பட்டியலை தயாரிக்க வேண்டும்.தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த, மாநில அளவில், தலைமைச் செயலர் தலைமையில், கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் தலைமையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டு, திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையிலும், சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி திட்டம், ஓராண்டுக்கு மேல் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
வதந்தி
அதனால், இந்த மாபெரும் திட்டத்தை வெற்றி பெற வைப்பது, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு கைகளில் தான் உள்ளது.கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை மக்களிடம் போக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் சிலர் வதந்திகளை பரப்பவும் வாய்ப்பு உள்ளது. அதை துவக்கத்திலேயே தடுக்க வேண்டும்.ஒருவருக்கு இரண்டு முறை தடுப்பூசி போட வேண்டும். கொரோனா தடுப்பூசி திட்டத்தால், மற்ற தடுப்பூசி திட்டங்கள், மருத்துவ பணிகள், எதுவும் பாதிக்கப்படாமல் தடுக்க, போதிய நடவடிக்கை
வேண்டும். தடுப்பூசி திட்டம் செயல்படத் துவங்கிய பின், 15 நாட்களுக்கு ஒரு முறை, குழுக்கள் சந்தித்து, திட்டத்தின் முன்னேற்றம் பற்றி ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE