புதுடில்லி : 'புல்வாமா தாக்குதல் பற்றி பொய் பிரசாரம் செய்ததற்காக, பிரதமர் மோடியிடம், காங்., மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், கடந்த ஆண்டு, பிப்., 14ல், பாக்., ஆதரவுபயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதலில், பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என, மத்திய அரசு குற்றஞ்சாட்டியது; இதை, பாகிஸ்தான் மறுத்தது. பாகிஸ்தான் பார்லிமென்டில், சமீபத்தில், அந்த நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பாவத் சவுத்ரி பேசுகையில், 'இந்தியாவை, அவர்கள் மண்ணில் நாம் தாக்கினோம். 'இம்ரான் கான் தலைமையில், புல்வாமாவில் நாம் பெற்ற வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி' என்றார்.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தாவது:புல்வாமா தாக்குதலுக்கு, பாக்., தான் காரணம் என்பதை, அந்த நாட்டு அமைச்சரே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுஉள்ளார்.
ஆனால், இந்த தாக்குதல் பற்றி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அரசு மீது சந்தேகத்தை எழுப்பி, பொய் பிரசாரம் செய்தன.'இது பயங்கரவாத தாக்குதல் இல்லை; பிரதமர் மோடியும், பாக்., பிரதமர் இம்ரானும், திட்டமிட்டு நடத்திய செயல்' என, காங்கிரசின் அப்போதைய தலைவர் ராகுலும், அவரது கட்சியினரும் கூறினர்.
மோடி மீதான எதிர்ப்பை, இந்தியா எதிர்ப்பாக, காங்கிரஸ் மாற்றிவிட்டது. புல்வாமா தாக்குதல் பற்றி பொய் பிரசாரம் செய்ததற்கு, பிரதமரிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE