சென்னை:நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஜெயலலிதா நினைவிடத்தில், பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடத்தை, பொதுப்பணித் துறை கட்டி முடித்துள்ளது. இறுதி கட்ட பணி நடந்து வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தின் பின்பகுதியில், அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அது, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம் என, பெயர் மாற்றப்பட்டது. இங்கு, 57.9௦ கோடி ரூபாய் மதிப்பில், ஜெ., நினைவிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது.
ஜெ., உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், நவீன தொழில்நுட்பத்தில், முழுதும் கான்கிரீட் பயன்படுத்தி, பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.இதற்கான பணி, சர்வதேச நிறுவனத்திடம் தரப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய திட்டங்களை செயல்படுத்தி, முன் அனுபவம் இல்லாத, ஈரோடை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நினைவிடம் கட்டும் பணி, 2018 மே மாதம் துவங்கியது.
பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடம் கட்ட, துபாயில் இருந்து கப்பலில், கட்டுமான சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் பரிந்துரைப்படி, கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டது. துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவன பொறியாளர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டது.
நவீன கட்டுமான தொழிற்நுட்பத்தில் முன் அனுபவம் இல்லாத நிறுவனத்தை பயன்படுத்தி, தற்போது, பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடத்தை முழுமையாக, பொதுப்பணித் துறையினர் கட்டி முடித்துள்ளனர்.
ஊரடங்கு காலத்திலும், பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன் உத்தரவுப்படி, முதன்மை தலைமை பொறியாளர்ராஜாமோகன், கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் உள்ளிட்ட பொறியாளர்கள்குழுவினர் முடுக்கிவிட்டு, இக்கட்டடத்தை இரவு, பகலாக கட்டி முடித்து உள்ளனர். வரைபடத்தில் உள்ளது போன்றே, பீனிக்ஸ் பறவை கட்டடம் தத்ரூபமாக வந்துள்ளதை, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்களும் பாராட்டியுள்ளனர்.
பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடத்தில், சென்ட்ரிங் பிரிக்கப்பட்ட நிலையில், படிகள் அமைத்தல், கிரானைட் கற்கள் பதித்தல் இறக்கைகளில், கண்ணாடி பொருத்துதல், வெள்ளை அடித்தல் உள்ளிட்டவை நடந்து வருகின்றன. இந்த பணி இரண்டு வாரங்களில் முடிக்கப்படும் என, கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE