சென்னை : தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள, 35 அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், 11 நாட்கள் நடத்திய சோதனையில், 4.12 கோடி ரூபாய் சிக்கியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கும் தீயணைப்பு துறை, சார் - பதிவாளர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் என, அரசு அலுவலகங்களில், லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பணம் கொடுக்காமல், எவ்வித கோப்புகளும் நகருவது இல்லை என, மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.
அதனால், தமிழகம் முழுதும், அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், அக்., 1ல் இருந்து அதிரடி சோதனை நடத்தி, கட்டு கட்டாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.அந்த வகையில், வேலுார் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர் செல்வம் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 3.25 கோடி ரூபாயை கைப்பற்றினர்.
அத்துடன், 450 சவரன் நகைகள், 6 கிலோ வெள்ளிப் பொருட்களும் சிக்கின. இவரது அலுவலகத்தில், 33.73 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.ஈரோடு மாவட்டம், பவானியில், கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சோதனை நடத்தி, 2.31 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வேலுார் மாவட்டத்தில், இரண்டு டாஸ்மாக் கடைகளில், கணக்கில் வராத, 61 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்.இதுபோல, நேற்று முன்தினத்துடன், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள, 35 அரசு அலுவலங்களில், 11 நாட்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 4.12 கோடி ரூபாயை கைப்பற்றி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE