மயிலாடுதுறை:நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய செய்வதில் பிரதமர் அக்கரை காட்ட வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் குருமூர்த்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

கும்பாபிஷேகத்தில், இறைவனிடம் கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென்று வேண்டினேன். நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. பாகிஸ்தான், சீனா எல்லை பிரச்னைகளை காரணம் காட்டி பிரதமர் மோடி அரசியல் செய்துகொண்டிருக்கிறாரே தவிர பொருளாதார வளர்ச்சியில் மக்களை முன்னேற்றம் அடைய செய்வதற்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பிரதமர் அக்கரைகாட்ட வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் தமிழகத்தில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றனர். ஆனால் அங்கு வேலைவாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் தமிழகம், புதுச்சேரிக்கு வேலை தேடி அவர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மாநிலங்களிலேயே மத்திய அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். புதுச்சேரியில் எதிர்க்கட்சியே கிடையாது. எதிர்க்கட்சி தலைவராக கவர்னர் தான் உள்ளார். மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டைபோட்டுக் கொண்டிருக்கிறார். 2021 சட்டசபை தேர்தலில் தமிழகதில் தி.மு.க.,வும், புதுச்சேரியில் காங். கட்சியும் ஆட்சிஅமைக்கும்.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், காங். நாகை வடக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE