புதுடில்லி கொரோனா ஊரடங்கு காலங்களில் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டங்களாக முயற்சிகளை மேற்கொள்கின்றன. நோய் பரவலை தடுக்க பல நாடுகளிலும் விமான சேவை உட்பட பல்வேறு சேவைகளும் நிறுத்தப்பட்டன. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், இந்தாண்டு, மார்ச், 23 முதல், பன்னாட்டு விமான சேவை, ரத்து செய்யப்பட்டது. அதேசமயம், கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசின், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, நம் நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

'வந்தே பாரத்' திட்டத்தில் இயக்கப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானங்களில், 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : வந்தே பாரத் திட்டம், மே, 7 முதல் துவங்கி நடந்து வருகிறது. இத்திட்டத்தில், ஏர் இந்தியா விமானங்கள், 54 நாடுகளில் உள்ள, 74 நகரங்களுக்கு இயக்கப்பட்டது.

அதில் 10 லட்சம் பேர், நம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆயினும் பயணிகள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், டிசம்பர் வரை, 1,600 விமான சேவைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE