நியூயார்க் : 'பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிடப்பட வேண்டும்' என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் 'பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பின் கீழ் நேற்று முன்தினம் பொது விவாதம் நடந்தது. அப்போது இந்தியா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பயங்கரவாதிகளால் நடத்தப்படும் பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறைகளை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

இத்தகைய வன்முறைகள் நாகரிக சமூகங்களை சீர்குலைக்கும் வகையில் அமைகின்றன.அமைதி மற்றும் பெண்கள் பாதுகாப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மேலும் திறம்பட செயல்பட வேண்டும்.பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிடப்பட வேண்டும். ஜனநாயக கட்டமைப்புகள் மற்றும் சட்டங்களை மெருகேற்றி பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய வேண்டும்.

அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் பெண்களின் அர்த்தமுள்ள பங்களிப்பு இருப்பதை நாம் உறுதிபடுத்த வேண்டும்.முடிவு எடுக்கும் அதிகாரமிக்க பதவிகளில் பெண்கள் இருக்க வேண்டும். இந்தியாவில் பெண்களுக்கு மிக உயர்ந்த அதிகாரம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 13 லட்சம் பெண் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொள்கைகளை வகுத்து அவற்றை அடிமட்டத்தில் செயல்படுத்தும் பணியில் சிறந்து விளங்குகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE