புதுடில்லி: முறையாக பதிவு செய்யாமல், வீடுகளில் உணவு சமைத்து, அதை, 'ஆன்லைன்' வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளை வழங்கி வருபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலை இழப்பு
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், அனைத்து தொழில்களுமே பெரும் சரிவை சந்தித்தன. பல நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். ஓட்டல்கள், சிறு உணவகங்கள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்டவை கடும் பாதிப்புகளை சந்தித்தன.வியாபாரம் ஒருபுறம் வீழ்ச்சி அடைந்த நிலையில், நகரங்களில் தனியாக தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்ட நிலையில், 'ஸ்விகி, ஸோமாட்டோ' போன்ற, 'ஆன்லைன் மொபைல்' செயலிகள் வாயிலாக, உணவு 'சப்ளை' செய்யும் வியாபாரம் சூடுபிடிக்க துவங்கின.

கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த பலர், வீடுகளில் உணவு சமைத்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையினை, குறைந்த முதலீட்டில் துவங்கினர்.இதற்கு வரவேற்பு அதிகரிக்க துவங்கியதை அடுத்து, சிறு உணவகங்கள் மற்றும் வீடுகளில் சமைத்து உணவு வழங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கின. வீடுகளில் சமைத்து உணவு வழங்கும் பல சிறு உணவகங்கள், முறையான உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
நடவடிக்கை
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்யும் உணவகங்கள், கட்டாயமாக உரிமம் பெற்றிருக்க வேண்டும்.அதற்கும் கீழ் வியாபாரம் செய்யும் உணவகங்கள், பதிவு பெற்றிருக்க வேண்டும். மார்ச் மாத நிலவரப்படி, 2,300 புதிய உணவகங்கள், பதிவு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளன. ஆனால், புதிய உணவகங்களின் எண்ணிக்கையோ, புற்றீசல் போல உயர்ந்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிறு உணவகங்கள், வீடுகளில் சமைத்து, ஆன்லைன் வாயிலாக சேவை அளிக்கும் நபர்கள் ஆகியோர், முறையான உரிமம் மற்றும் பதிவு பெறவில்லை எனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெறாதவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கவும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது.அந்த உத்தரவை, மாநில உணவு பாதுகாப்பு துறை நிறைவேற்ற துவங்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE