'மனு ஸ்மிருதி' என்று அழைக்கப்படும் மனு தர்மம் என்பது, ஹிந்துக்கள் பிறப்பு முதல், இறப்பு வரை, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குப்படுத்திக் கூறும் நுால்.
இந்நுாலை பின்பற்றி தான், சந்திரகுப்த மவுரியரின் தலைமை அமைச்சர் சாணக்கியர், 'அர்த்தசாஸ்திரம்' என்ற, அரசு நிர்வாகம் தொடர்பான நுாலை எழுதி, புகழ் பெற்றார். மேலும், இந்திய தண்டனை சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள் இயற்றுவதற்கு முன், நம் நாட்டை ஆண்ட இஸ்லாமியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள், ஹிந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடியுரிமை வழக்குகளிலும், மனு தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கினர். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மனு தர்ம சாஸ்திரத்தில், பெண்களை பற்றி கூறப்பட்டுள்ளவற்றில் சில...
* பெண்கள் எங்கு மதிக்கப்படுகின்றனரோ, அங்கு இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கு அவமதிக்கப்படுகின்றனரோ, அங்கு செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்
* உயர்ந்த மணி போன்ற ரத்தினம் போன்றவளான பெண்ணை, போற்றி பாதுகாக்க வேண்டும். இளம் வயதில் தந்தையும், வளர்ந்த வயதில் கணவனும், வயதான காலத்தில் அவளது வாரிசுகளும் பாதுகாக்க வேண்டும்; பாதுகாக்காமல் விட்டுவிடக் கூடாது
* தந்தை, சகோதரர், கணவர் போன்ற ஒவ்வொருவரும் தாங்கள் நலமாக வாழ நினைத்தால், அவரவர் வீட்டில் உள்ள பெண்களை மதித்து, கவுரவிக்க வேண்டும்
* எந்தெந்த இடங்களில் பெண்கள் தகாத, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் இகழப்பட்டு, அவமானப்படுத்தப்படுகின்றனரோ, அந்த இடமே, விஷம் உண்டவன் அழிவது போல் அழிந்து போகும்
* இல்லத்தின் விளக்காய் விளங்குபவர்கள். வீட்டின் மகாலட்சுமியாய் திகழ்பவர்கள்.
- இப்படி, பெண்களின் அருமை, பெருமைகள், அந்நுாலில் கூறப்பட்டுள்ளன. எனினும், அந்த நுாலை, இங்கு யாரும் பின்பற்றவில்லை. அதன் அடிப்படையில், எந்த மதமும், ஜாதியும் செயல்படவில்லை.இந்திய அரசியல் சட்டம் போன்ற சட்டங்களின் படியும், மனசாட்சியின்படியும் தான், அனைவரும் செயல்படுகின்றனர். வேதங்கள், காவியங்கள், உபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ள நல்லவனவற்றை பின்பற்றி நடக்க வேண்டும் என்பது தான், ஹிந்து மதத்தின் அடிப்படை. அவ்வாறு, பின்பற்றுபவர்கள் தான் ஹிந்துக்கள்.இதை சரிவர புரியாமல், நானும் ஹிந்து தான் எனக் கூறிக் கொண்டு, அறநெறிகளுக்கு முரணாக நடப்பவர்கள் ஹிந்துக்கள் என்றாலும், உண்மையில் அவர்கள் ஹிந்துக்கள் அல்ல.
அப்படித் தான், ஒரு கட்சியின் தலைவரும், சமீபத்தில், மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது என, பெண்களை பற்றி அவதுாறாக சொல்லி, வீண் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில், கற்று தேர்ந்த விற்பன்னர்களுக்கு கூட, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள மனுஸ்மிருதியை படித்து அர்த்தம் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால், இந்த நபருக்கு, தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் தெரியாது. அவ்விரு மொழிகளையும் இவர் சரிவர பேசி, யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர், குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றே, யாரோ, எப்போதோ தமிழில், அரைகுறையாக மொழி பெயர்த்ததை, பொது வெளியில் சொல்லி, வழக்குகளில் சிக்கியுள்ளார். இதுபற்றி கேட்டால், அப்படித் தான் அவர் சொல்லியுள்ளார்; இவர் சொல்லியுள்ளார் என, சப்பைக்கட்டு கட்டுகிறார். உண்மையில் அவர், ஹிந்து பெண்களை நேசிப்பவர், மதிப்பவர் என்றால், 'தவறுதலாக பேசி விட்டேன்; மன்னித்து விடுங்கள்' எனக் கூறிவிட்டால், பிரச்னை முடிந்தது. ஆனால், அதை அவர், அரசியல் லாபத்திற்காக, விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்.
விமர்சனம்
அவருக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும், புறப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, பா.ஜ.,வினர் தக்க பதிலடி கொடுக்கின்றனர். குட்டக் குட்ட குனிபவனும் கோமாளி தான் என்ற ரீதியில், இதுபோன்ற வசை சொற்களை, அனுமதிப்பதும் தவறு தான். ஏனெனில், சில மதங்களில், ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. கடவுளர்கள் படங்களை கூட, அனுமதியின்றி யாரும் பிரசுரிக்க முடியாது. பிற மதங்களில், நம் இஷ்டத்திற்கு சேரவும் முடியாது; விலகவும் முடியாது. இன்னும் சில மதங்களில், கட்டாய வழிபாட்டு முறைகள், பூஜைகள் உண்டு. ஆனால், நம் ஹிந்து மதத்தில், 'கடவுள் இல்லை' என்று சொல்பவர்களுக்கும் இடமுண்டு. ஆனால், பெண்களை கீழ்த்தரமாக விமர்சிப்பவர்கள், பெண்களை தவறாக சித்தரிப்பவர்களுக்கு, எந்த காலத்திலும், நம் மதத்தில் இடமே கிடையாது.
அந்த தலைவர், ஹிந்து பெண்களை அவதுாறாக பேசும் போது, சுயநினைவுடன் இருந்தாரா என்பதே, கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், அந்த தலைவர், தன் கட்சியின் சமூக வலைதள பக்கத்தில், தன் தாய் மற்றும் சகோதரியின் படத்தை தான் வைத்துள்ளார். அந்த படமும், அந்த தாய், தன் மகளுக்கு விபூதி பூசி, ஆசிர்வாதம் செய்வது போலத் தான் உள்ளது. எனவே, எத்தனையோ முறை, எதற்கெல்லாமோ, தமிழ் சமுதாயத்திடமும், எதிர்க்கட்சிகளிடமும் மன்னிப்பு கேட்டுள்ள அந்த தலைவர், ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்பதில், எந்த தவறும் இல்லை. ஏனெனில், அவரை இன்னமும், சகோதரனாக, சக மதத்தினராகத் தான், உண்மையான ஹிந்துக்கள் பார்க்கின்றனர். இப்படி பேசியதால், அவருக்கு விழும் சில ஓட்டுகளும், விழாமல் போய் விடும் ஆபத்தும் உள்ளது.
ஹிந்து மதத்தை பற்றியும், ஹிந்து பெண்களை பற்றியும் தவறாக பேசும் இவர், மற்ற மதங்களை பற்றி, இப்படி அவதுாறாக வெளிப்படையாக பேச முடியுமா? அவரின் பேச்சை கேட்பவர்களுக்கு, 'இவர் வீட்டிலும் பெண்கள் உள்ளனரே; அப்படியெனில் அவர்களையும் சேர்த்து தான் சொல்கிறாரா...' என்ற கேள்வி எழும்.எனவே, எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாக பேசுவதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.
அவர் பேசியது, மன்னிக்க முடியாத குற்றம். இவரின் பேச்சு, ஹிந்து விரோத தி.மு.க., - தி.க., போன்ற சில கட்சிகளுக்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கும். பிறருக்கு, அருவருப்பாகத் தான் இருக்கும். அரசியலில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக, இப்படியும் அவதுாறாக பேசுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவரின் பேச்சு, இவர் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். அந்த கூட்டணிக்கு, விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இப்படி, வாய்க்கு வந்தபடி உளறியுள்ளார். ஏனெனில், அக்கட்சியும் ஹிந்து மதத்தையும், அதில் ஒரு குறிப்பிட்ட ஜாதியையும் அவதுாறாக பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளது.
சொந்த பந்தம்
ஆனாலும், அவர்களது ஓட்டு வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது மாற்றியும் பேசும். இதை ஹிந்துக்கள் எப்போதோ உணர்ந்து கொண்டனர். கஞ்சி குடிப்பர், அப்பம் சாப்பிடுவர். ஆனால், ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டார்கள். இதுதான் அவர்களது பழக்கம். ஆதி காலம் முதல் இன்று வரை பெண்கள் தடம் பதிக்காத துறைகளே இல்லை எனலாம். வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே, நம் நாட்டில், பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது என்பதற்கான சாற்றுகள் ஏராளமாக உள்ளன.எதையும் அரையும், குறையுமாக, மேற்போக்காக பார்த்து விட்டு, படித்து விட்டு, உலகமே எனக்கு தெரியும் என்று பேசும், இவர் போன்ற, 'மேதை'களை என்ன செய்வது... இவர்களை இப்படியே விட்டால், ஹிந்து மதத்தை கந்தல் கோலமாக ஆக்கி விடுவர். எனவே, இவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.
சமீபத்தில் இப்படித் தான் ஒரு அரை வேக்காடு, 'கறுப்பர் கூட்டம்' என்ற பெயரில், காமாசோமாவென பேசி, குண்டர் சட்டத்தில் கைதாகி, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்து வருகிறது. அதுபோல, இந்த கும்பலின் தலைவருக்கும், சிறை தான் தக்க பாடம் கற்பிக்கும். எப்படி அவரவர் தாய், சொந்த பந்தம் உயர்வாக தெரிகிறதோ, அதுபோலத் தான், அவரவர் சொந்த மதம். சொந்த மதத்தை புரிந்து கொள்ளாமல், பிற மதத்தை போற்றுவது, நம் மதத்தை துாற்றுவது, எவ்வளவு பெரிய இழி செயல் என்பதை, அவர் மட்டுமின்றி, பிறரும் அறிந்து கொள்ள வேண்டும்.
இல்லையேல், இந்த காலத்தில், சமூகத்தில் அமைதி நிலவாது. சட்டமும், தண்டனையும் தான், சமூகத்தில் அமைதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கை, பெரும்பாலானோருக்கு உள்ளது. பெண்களை தாயாக மதிக்கும் நம் நாட்டில், எதிர்காலத்திலும், இதுபோன்ற அவதுாறு சொற்கள், பேச்சுகள் தடை செய்யப்பட வேண்டும்.
கொள்கை ரீதியாக அரசியல் செய்யப்பட வேண்டுமே தவிர, மதத்தின் அடிப்படையில், மதங்களின் உயர்வு, தாழ்வு அடிப்படையில் அரசியல் செய்யக் கூடாது என்ற பாடத்தை, நம் அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் கற்றாக வேண்டும்.ஹிந்து மதத்தில், அதன் தத்துவத்தில், பல உயரிய கருத்துகள் உள்ளன. அதை சரியாக புரிந்து கொள்ளாமல், அவதுாறு பரப்புவது தவறு. பொய் சொல்லக்கூடாது; பிறரை ஏமாற்றக் கூடாது; வறியவர்களுக்கு உதவ வேண்டும் என்பது போன்ற நெறிமுறைகள், வாழ்க்கை தத்துவங்கள் ஹிந்து மதத்தில் அதிகம்.அதை சரியாக படிக்காமல், யாரோ தவறாக சொல்லியதை, தன் கருத்தாக கூறுவதை, எப்படி அனுமதிக்க முடியும்?
அந்த நபர் சொல்லியது போல, ஹிந்து மதத்தில் பெண்கள் கீழ்தரமாக, அந்த காலத்தில் நடத்தப்பட்டனர் என்றால், அதை இப்போது பேசுவதால் என்ன பயன்; யாருக்கு லாபம்?இப்படி அவர் சொல்லியதால், அவரின் மதிப்பும், அவர் பிறந்த மற்றும் சார்ந்துள்ள மதத்திற்கும் அவரே கெட்ட பெயரை உருவாக்க முனைந்துள்ளார்.
இந்த செயலை யாரும் செய்ய மாட்டார்கள்.பெண்களுக்கு பொது இடங்களில் சம உரிமை, அந்தஸ்து இல்லாத மதங்களிலும் கூட அல்லது அந்த மதத்தினர் கூட, இவரின் பேச்சை ரசிக்க மாட்டார்கள். ஆனால், நம் அரசியல் தலைவர்கள், தங்களின் கூட்டணி லாபத்திற்காக, அந்த நபர் சொன்னது சரி தான் எனக் கூறியது தான், வேதனையிலும் வேதனை. இதை பார்க்கும் போது, அரசியல் லாபத்திற்காக, ஆட்சியை பிடிப்பதற்காக, அதிகாரத்தை பெறுவதற்காக எந்த கீழ்த்தரமான செயலிலும் ஈடுபட அந்த தலைவர்கள் தயாராக இருப்பரோ என, அஞ்சத் தோன்றுகிறது.
கொந்தளிப்பு
நியாயமான அரசியல் தலைவராக இருந்திருந்தால், அவதுாறாக பேசியவர், கூட்டணி கட்சித் தலைவராக இருந்தாலும், அவரை சரியாக வழிநடத்தி இருக்க வேண்டும்.'அவர் பேசியது, அவரின் சொந்த கருத்து என்றாலும், அவர் எங்கள் கூட்டணியில் இருப்பதால், அவரை கண்டிக்கிறேன். இதுபோன்ற பேச்சுகள், கூட்டணிக்கு ஓட்டுகளை சிதற அடிக்குமே தவிர, ஓட்டுகளை சேகரிக்காது' என, சொல்லியிருக்க வேண்டும்.
அதுவும், இன்னும் சில மாதங்களில், சட்ட சபை தேர்தல், தமிழகத்தில் நடக்கவிருக்கும் நேரத்தில், இதுபோன்ற குதர்க்கப் பேச்சுகளை, பெரிய கட்சிகளின் தலைவர்கள் கண்டிக்கவில்லை என்றால், வரவிருக்கும் தேர்தல் களம் எவ்வளவு கொந்தளிப்பாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.மதம், யாருக்கும் சாப்பாடு போடப் போவதில்லை. நல்ல மனமும், நல்ல செயல்பாடும், ஒழுக்கமும், நேர்மையும், உழைப்பும் தான் முன்னேற்றம் தரும் என்பதை, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எப்போது உணர்கின்றனரோ, அப்போது தான், தமிழகம் உண்மையில் வளர்ச்சி அடையும்!
எல்.வி.வாசுதேவன்
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
இ - மெயில்: lvvasudev@gmail.com