சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த, முறையான அறிவிப்பு, நாளை வெளியிடப்பட உள்ளது. போக்குவரத்துக் கழக இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தும், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இதற்கான அறிவிப்பை
வெளியிட உள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும், 14ம் தேதிகொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி, வார விடுமுறை நாளான சனிக்கிழமை வருகிறது.இதனால், சொந்த ஊர்களுக்கு செல்வோர், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் கிளம்பி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் ஊர் திரும்புவர். அதனால், 12ம் தேதி முதல், 16ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க வாய்ப்பு உள்ளது.
முன்பதிவு மையங்கள்
கடந்தாண்டு, சென்னையில், ஐந்து இடங்களில் இருந்து, 10 ஆயிரத்து, 940 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தாண்டும், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
*ஆந்திரா செல்லும் பஸ்கள், மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும்; திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்
*மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும்; விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள், தாம்பரம், 'மெப்ஸ்' நிலையத்தில் இருந்தும்
இயக்கப்படும்
*கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள், கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்தும்; பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து, வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், ஓசூர் செல்லும் பஸ்களை இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.அதேபோல, சென்னை யில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணியருக்காக, சிறப்பு பஸ்களுக்கான, ௩௦ முன்பதிவு மையங்கள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
50 சதவீத பயணியர்
இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆண்டு, தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே, 15 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருந்தனர். இந்தாண்டு தீபாவளிக்கு, இன்னும், 13 நாட்களே உள்ள நிலையில், தற்போது, 10 ஆயிரத்துக்கும் குறைவான பயணியரே முன்பதிவு செய்துள்ளனர்.
தொலைதுார பஸ்களிலும், 50 சதவீத பயணியர் தான் பயணிக்கின்றனர். ஆயுத பூஜைக்கு இயக்கப்பட்ட பஸ்களில் கூட கூட்டம் இல்லை. இந்நிலையில், போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம், நாளை நடக்க உள்ளது.அதன்பின், தீபாவளி சிறப்பு பஸ்கள் முன்னேற்பாடுகள் குறித்து,அமைச்சர் அறிவிப்பார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE