நவ.16 முதல் பள்ளி,கல்லூரிகள் திறப்பு! | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நவ.16 முதல் பள்ளி,கல்லூரிகள் திறப்பு!

Updated : நவ 01, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (18)
Share
சென்னை : தமிழகத்தில், ஏழு மாதங்களுக்கு பின், பள்ளி, கல்லுாரிகள், வரும், 16ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனையுடன், சினிமா தியேட்டர்களும், திரையரங்கு வளாகங்களும், 10ம் தேதி முதல் செயல்பட உள்ளன. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு அனுமதி என, மேலும் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.இதுதொடர்பாக,
நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள்  திறப்பு!

சென்னை : தமிழகத்தில், ஏழு மாதங்களுக்கு பின், பள்ளி, கல்லுாரிகள், வரும், 16ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனையுடன், சினிமா தியேட்டர்களும், திரையரங்கு வளாகங்களும், 10ம் தேதி முதல் செயல்பட உள்ளன. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு அனுமதி என, மேலும் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி, நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசு வழிகாட்டுதல்படி, தமிழகத்தில், மார்ச், 25 முதல் ஊரடங்கு உத்தரவு, பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. நோய் தொற்றில் இருந்து, மக்களை காத்து, உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது.

இதன் விளைவாக, நோய் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், நோய் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொது மக்களின் ஒத்துழைப்பினாலும் தான், நோய் தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.மாவட்ட கலெக்டர்களின் கருத்துக்கள் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார வல்லுனர்கள் ஆலோசனை அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொது ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன், வரும், 30ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன், புதிய தளர்வுகளும் அறிவிக்கப்படுகின்றன.


புதிய தளர்வுகள் விபரம்:* வரும், ௧௬ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். அனைத்து கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும், 16ம் தேதி முதல் செயல்படும். பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட, அனைத்து விடுதிகளும் அனுமதிக்கப்படும்

* தற்காலிக இடத்தில் செயல்படும், சென்னை, கோயம்பேடு பழ மொத்த விற்பனை மார்க்கெட், வரும், 2ம் தேதி திறக்கப்படும். பழம் மற்றும் காய்கறிகள் சில்லரை விற்பனை கடைகள், மூன்று கட்டங்களாக, வரும், 16ம் தேதி முதல் திறக்கப்படும்.

* பொது மக்களுக்கான, புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை, மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப துவங்கப்படும்.

* சின்னத்திரை உள்பட திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகளில், ஒரே சமயத்தில், 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதிக்கப்படுவர்.


* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்கள் உட்பட, அனைத்து திரையரங்களும், 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி, வரும், 10ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.

* மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல் பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள், 16ம் தேதி முதல், 100 நபர்கள் பங்கேற்கும் வகையில் அனுமதிக்கப்படும்.

* பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள், வரும், 10ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.


* திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு, 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதிக்கப்படும்.


* ஏற்கனவே, 50 வயதுக்கும் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன், உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, 60 வயதுக்குக்கு குறைவான வர்களுடன், உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படும்.


தொடரும் தடைகள்!* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தற்போதுள்ள நடைமுறைகள்படி, எந்த விதமான தளர்வுகளும் இன்றி, ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்களுக்கு தடை நீடிக்கும்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, மற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கும் தடை நீடிக்கும்.

* வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்களுக்கும், 'இ - பாஸ்' முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்துள்ளார்.


மக்கள் ஒத்துழைப்பு முதல்வர் வலியுறுத்தல்முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளதாவது:
கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், பொது மக்கள், பண்டிகை காலங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், அடிக்கடி சோப்பை பயன்படுத்தி, கை கழுவ வேண்டும். வெளியிடங்களுக்கு முக கவத்தை அணிந்து சென்று, சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

அவசிய தேவை இல்லாமல், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால், நோய் தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
எனவே, அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோய் தொற்றின் நிலையை கருத்தில் வைத்து, எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளுக்கும், தேவைக்கேற்ப தளர்வுகள் வழங்கப்படும்.
இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X