சென்னை : 'நில உரிமையாளர்களின் ஆட்சேபனைகளை நிராகரிக்க நிலம் கையகப்படுத்தும் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை; ஆட்சேபனையை ஏற்க நிராகரிக்க அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை -- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் அமைக்கும் திட்டத்துக்காக நாமக்கல் மாவட்டத்தில் மோகனுார் -- நாமக்கல்; - சேந்தமங்கலம் -- ராசிபுரம் சாலையை விரிவுபடுத்த வேண்டும்.இதற்காக நாமக்கல் மாவட்டம் அய்க்கியம்பட்டி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நிலம் கையகப்படுத்தும் அதிகாரியான மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி அதற்கான 'நோட்டீஸ்' வெளியிட்டார்.
இந்த நடவடிக்கைக்கு நில உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆட்சேபனைகளை நிராரித்து சிறப்பு வருவாய் அதிகாரி உத்தரவிட்டார். நிலம் கையகப்படுத்தலுக்கான அறிவிப்பாணையை நில நிர்வாக ஆணையரும் அரசு கெஜட்டில் வெளியிட்டார்.
இதனால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் லெனின்குமார் உள்ளிட்ட ஒன்பது பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் என்.மனோகரன் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
நிலம் கையகப்படுத்தும் அதிகாரியை பொறுத்தவரை நில உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி ஆட்சேபனைகளை பெற்று அரசுக்கு துறையின் கருத்து ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அதன்பின் அரசு தான் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க வேண்டும்.
ஆட்சேபனைகளை நிராகரித்து நிலம் கையகப்படுத்தும் அதிகாரி எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது; அதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை.இந்த நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மீண்டும் மீண்டும் இதே தவறுகள் தொடர்கின்றன. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் குறுக்கிட்டும் அதிகாரிகள் தங்கள் தவறை திருத்திக் கொண்டதாக தெரியவில்லை. ஆட்சேபனைகளை பரிசீலித்து ஏற்பதையும் நிராகரிப்பதையும் அரசு தான் செய்ய வேண்டும்; அரசுக்கு தான் அந்த அதிகாரம் உள்ளது.
சில முக்கிய திட்டங்களை நிறைவேற்ற நிலங்கள் கையகப்படுத்த வேண்டியதிருக்கும். சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி தான் அதை மேற்கொள்ள வேண்டும்.
தங்கள் வாழ்நாளில் சேர்த்த பணத்தில் கட்டிய வீட்டை மக்கள் இழக்கின்றனர்; புதிதாக வேறு வீடு வாங்கவோ கட்டவோ அவர்களால் முடியாது. அதனால் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் போது இதை எல்லாம் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்; இயந்திரகதியாக நிராகரிக்க முடியாது.இந்த வழக்கை பொறுத்தவரை அறிவிப்பாணை பிறப்பிப்பதற்காக நில நிர்வாக ஆணையருக்கு சிறப்பு வருவாய் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதைத்தொடர்ந்து நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.வருவாய் அதிகாரியின் ஊதுகுழலாக நில நிர்வாக ஆணையர் இருக்கக் கூடாது. உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் தனிப்பட்ட முறையில் மனதை செலுத்தி பரிசீலிக்க வேண்டும். ஆனால் இயந்திரகதியாக நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே சிறப்பு வருவாய் அதிகாரியின் நடவடிக்கை நில நிர்வாக ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
புதிதாக சிறப்பு வருவாய் அதிகாரி விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதை அரசு தனிப்பட்ட முறையில் மனதை செலுத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் 12 வாரங்களில் முடிய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE