நாக்பூர் : ''கொரோனா ஏற்படுத்திய பாதிப்பிற்கு இடையிலும், வழக்கு விசாரணைகளும், நீதி பரிபாலனமும் நடந்து வருகிறது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், 'ஆன்லைன்' மூலம் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்து, விசாரணையில் பங்கேற்க உதவும், 'நியாய் கவுசல்' என்ற மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இம்மையத்தை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே திறந்து வைத்து பேசியதாவது:

வழக்கு விசாரணைகளுக்கு, கொரோனா வைரஸ், மிகப் பெரிய சவாலை கொடுத்துள்ளது. நேரடி விசாரணை மற்றும் ஆன்லைன் விசாரணை என, இரு தரப்பிலும் சவால்கள் உள்ளன. எனினும், அனைவருக்கும் தேவையான தொழில்நுட்ப வசதி கிடைக்காத வரை, இந்த ஆன்லைன் விசாரணை, உரிய தீர்வாக இருக்காது. உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. எனினும், தொடர்ந்து சமூக இடைவெளியை பராமரித்து, பாதுகாப்பான முறையில் வழக்கு விசாரணைகளை நடத்துவது சாத்தியமில்லை.
இருந்தபோதிலும், 'சொர்க்கமே இடிந்து விழுந்தாலும், நீதி மறுக்கப்படக் கூடாது' என்பதற்கு ஏற்ப, கொரோனா காலத்திலும், சட்ட நடைமுறைகளை பின்பற்றி, நீதி பரிபாலனம் நடந்து வருவது பெருமையாக உள்ளது. கொரோனா, அனைவரையும் பாதித்துள்ளது. கொரோனாவால் வருவாய் இழந்த ஒரு வழக்கறிஞர், காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை அறிவேன். சில மாநிலங்கள், நடமாடும், 'வைபை' வாகனங்கள் மூலம், வழக்கறிஞர்கள் வழக்குகளை கையாள ஏற்பாடு செய்துள்ளன. அனைவருக்கும், பாரபட்சமின்றி தொழில்நுட்ப வசதி கிடைக்க வேண்டும். அதற்கு, நியாய் கவுசல் மையம் துணை புரியும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE