வாஷிங்டன் :'' அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளும், இந்தியா உடனான நல்லுறவு தொடருவதை முக்கியமாக கருதுகின்றன,'' என, அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மார்கன் ஓர்டகஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சவால்
இந்தியாவுடான நட்புறவு குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மார்கன் ஓர்டகஸ் கூறியதாவது:இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவுக்கு, ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆதரவு உள்ளது. இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான செயல்பாடுகளை மேற்கொள்வது உள்ளிட்ட சர்வதேச சவால்களை சமாளிக்க, இந்தியா உடன் வலிமையான நட்புறவு அவசியம்.எனவே, எந்த அரசாக இருந்தாலும், இரு நாடுகளும் பாதுகாப்பாக, வளமாக, வலிமையாக விளங்க வேண்டும் என, அமெரிக்க மக்கள் விரும்புகின்றனர். அடுத்த, 5 - 10 ஆண்டுகளில் எதிர்கொள்ள உள்ள சர்வதேச சவால்களை தனித்து நின்று சமாளிக்க முடியாது என்பதால், இந்தியா போன்ற நாடுகளின் நல்லுறவை, அமெரிக்கா பேணிக் காக்கிறது.இந்தியா உடனான நல்லுறவு, கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக, எந்த அரசுக்கும் முக்கியமானதாக விளங்குகிறது.
'ஹவ்டி மோடி'
ஆசியாவிலும், உலகளவிலும் இந்தியாவின் தலைமைப் பண்பு அதிகரித்து வருவதை பார்த்து, அமெரிக்க மக்கள் பெரிதும் வியக்கின்றனர். கடந்த ஆண்டு நடந்த, 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியே இதற்கு சான்று. அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் மிக நெருக்கமான நட்பு வைத்துள்ளார். அதுபோல, அமெரிக்க - இந்திய மக்கள் இடையிலும் தனித்துவமான நல்லுறவு உள்ளது. இந்திய கலாசாரம் பல வகையில் அமெரிக்க கலாசாரத்தில் ஊடுருவி, தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கர்கள், இந்திய உணவகம் நடத்துவதையும், இந்தியர்கள், 'பிட்சா' விற்பனையில் ஈடுபட்டுள்ளதையும் வைத்தே, இதை புரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE