சென்னை: 'தமிழகம் மீட்போம்' என்ற கோஷத்துடன், தி.மு.க., சார்பில், தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம், ஈரோட்டில் நடந்தது. அதில், ''அ.தி.மு.க., ஆட்சியை, மக்கள் விரட்டி அடிப்பர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்க உள்ள, சட்டசபை தேர்தலுக்கு, அனைத்து அரசியல் கட்சிகளும், ஆயத்தமாகி வருகின்றன.தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க, 'தமிழகம் மீட்போம்' என்ற கோஷத்தை, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., முன்வைத்துள்ளது.
கும்பலின் ஆட்சி
அதன்படி, நேற்று துவங்கி, 10ம் தேதி வரை, எட்டு மாவட்டங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஸ்டாலின் பேசும் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஈரோட்டில், நடந்த முதல் பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் நடப்பது, ஒரு கட்சியின் ஆட்சி அல்ல; ஒரு கும்பலின் ஆட்சி. கட்சி என்றால், அதற்கு ஒரு தலைமை இருக்க வேண்டும், அ.தி.மு.க.,வுக்கு தலைவரும் இல்லை; பொதுச்செயலரும் இல்லை. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்.,சும், ஆளுக்கொரு பலகை தயாரித்து, அதன் கீழே உட்கார்ந்து உள்ளனர்.
எப்போது, இரண்டாக உடைந்து விழுமோ என்ற நிலைமையில், ஒரு கண்ணாடி துண்டு ஒட்டிக் கொண்டு இருப்பதை போல, கட்சியும், ஆட்சியும் இருக்கிறது.உழைக்காமல் நடித்து, பதவிக்கு வந்த இ.பி.எஸ்.,சும், பன்னீர்செல்வமும், முதல்வர், துணை முதல்வர் என்ற, வேடங்களில் நடித்து வருகின்றனர்.அடுத்த ஆண்டு மே மாதம், வேடங்களை கலைத்து விட்டு, கோட்டையை விட்டு, அவர்கள் வெளியேற போகின்றனர் என, சொல்ல மாட்டேன்; அவர்கள், மக்களால் விரட்டப்பட இருக்கின்றனர்.
கருத்து கணிப்பு
இவர்களிடம் இருந்து, தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. 'சி வோட்டர்' என்ற அமைப்பு, சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது.கொரோனா காலத்தில், அதிகம் கவனம் ஈர்த்த முதல்வர் பட்டியலில், கடைசி ஐந்து பேரில், ஒருவராக இ.பி.எஸ்., இடம் பிடித்தார். இதனால், இந்தியாவே தமிழகத்தைப் பார்த்து சிரிக்காதா? இதற்காகத் தான் தமிழகத்தை மீட்டாக வேண்டும் என்கிறோம்.
எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டது. அதில், தமிழகம், 14வது இடத்தில் இருக்கிறது. கருணாநிதி ஆட்சியில், இரண்டாவது இடத்தில் இருந்தது தமிழகம். இன்று, முதல்வர் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், பெரிய நிறுவனங்கள், தொழில் துவங்க வரவில்லை, அதனால் தான், தமிழகத்தை மீட்டாக வேண்டும் என்கிறோம்.
தமிழகம் என்ற கம்பீரமான மாநிலத்தை, பா.ஜ., அரசின் பாதத்தில், ஒரு பூனைக்குட்டியை போல படுக்க வைத்து விட்டனர். இந்த இழிநிலையை துடைக்க, தமிழகத்தை மீட்டாக வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE