ஜெனிவா: கொரோனா பாதித்த நபருடன் கொண்டிருந்ததால் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வைரஸ் பல நாட்டு தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. பிரிட்டன் பிரதமர், கனடா பிரதமர், அமெரிக்க அதிபர் என பல தலைவர்களும் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், கொரோனா பாதித்த நபருடன் தொடர்பு கொண்டதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட நபர் என்னை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. நான் நலமுடனேயே உள்ளேன். அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும், வருகிற நாட்களில் உலக சுகாதார அமைப்பு வரைமுறைகளின்படி, என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். வீட்டில் இருந்தபடியே பணி செய்வேன். நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியம்.

இதன் வழியே கொரோனா பரவலின் சங்கிலியை நாம் உடைக்க முடியும். வைரசை ஒழிக்க முடியும். சுகாதார விஷயங்களை பாதுகாக்க முடியும். கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கவும் மற்றும் கடுமையான பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கும் வேண்டிய பணிகளை நானும் என்னுடன் பணிபுரிபவர்களும் தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE