சென்னை : இந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசிய திருமாவளவன் மீதான கோபம் தீரவில்லை. தொடர்ந்து அவருக்கு எதிராக டுவிட்டரில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகிறது.
இணையதள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற எம்பியும்., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன், ''இந்து பெண்கள் எல்லோரும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள் என மனு தர்மாவில் கூறப்பட்டுள்ளதாக'' பேசினார். இது சர்ச்சையானது. இந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூகவலைதளமான டுவிட்டரில் அவருக்கு எதிரான கோபம் இன்னும் தீரவில்லை. ஏற்கனவே அவருக்கு எதிராக #பெண்களை_இழிவுபடுத்தும்_திருமா என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. தொடர்ந்து அவருக்கு எதிரான பல பெயர்களில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகின. இன்று(நவ., 2) #திருட்டுப்பயதிருமாவளவன் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது. தொடர்ந்து இந்துக்கள், இந்து கடவுள்கள் குறித்து அவதூறு செய்யும் அவரை கைது செய்ய வேண்டும் என பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு, 'இந்து விரோத சக்தி திருமாவளவன்' என பதிவிட்டு, மேற்சொன்ன ஹேஷ்டாக்கில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், ''மோடி எதிர்ப்பு என்பது திட்டமிட்டு உருவாக்கி, பொதுமக்களிடையே மோடி எதிர்ப்பு உளவியல் கட்டமைப்பட்டது'' என ஒரு பேட்டியில் திருமாவளவன் தெரிவித்ததாக கூறி, அதை மேற்கோள் காட்டி பலரும் இன்று அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

ஒருவர், ''முத்தலாக் வந்தப்போ அது அவுங்க மத உரிமைனு சொன்ன வாய், இப்போது பெண்ணுரிமை பற்றி பேசுதோ...'' என்றும்..., மற்றொருவர், ''இந்துக்களை இழிவாக இகழ்ந்து, இன்னல்களை இழுத்து விடலாம், இனி இன்பம் அடைந்து விடலாம் என நினைத்தால் அத்தகையோர்க்கு பேரழிவு தான் ஏற்படும்'' என்றும்... ''தன்னைத் நம்பி வந்த ஏமாளிகளை வைத்து தேவர் இனத்தை பேசக் கூடாத வார்த்தைகளால் கோஷம் போட வைத்து, தமிழகத்தில் சாதி கலவரத்தை தூண்ட முயலும் திருமாவை, தமிழக அரசு கைது செய்ய வேண்டும்...'' என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விஷயத்தில் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் திமுக.,வையும் சேர்த்து வசை பாடி வருகின்றனர். அதுதொடர்பாக ஒருவர், ''நீங்கள், உங்கள் கொள்கையில் இருந்து மாறாத கொள்கைவாதி என்றால், ஒரே ஒரு அறிக்கை மட்டும் தாருங்கள். இந்துக்கள் யாரும் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என்று. கேக் இனிக்கும், கஞ்சி ருசிக்கும், எங்கள் பிரசாதம்? இதுதான் உங்கள் சமத்துவம்.?'' என பதிவிட்டுள்ளார்.