சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின், இன்று வெளியிட்ட அறிக்கையில், ‛வேளாண் சட்டங்கள் பதுக்கலை அனுமதிக்க - பொருட்களின் விலையோ எகிறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் நலனுக்கான சட்டங்களை பஞ்சாப், கேரளா இயற்றியிருக்கின்றன. போலி விவசாயி முதல்வர் பழனிசாமி என்ன செய்கிறார்? திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி தமிழகம் மீட்போம்,' எனக் கூறியுள்ளார்.
மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* அதிமுக அரசு ஆதரித்து, மத்திய பாஜ., அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் ‛எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ள' கார்ப்பரேட் நிறுவுனங்களுக்கு அளித்த சுதந்திரத்தின் விளைவால் பருப்பு, சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு என அனைத்தும் விலை ஏறிவிட்டன.

* குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிறைத் தண்டனை என்று பஞ்சாப் சட்டம் கொண்டுவந்திருக்கிறது. திமுக உள்ளிட்ட அமைப்புகள் சட்டங்களை எதிர்த்து வழக்குப் போட்டிருக்கின்றன. கேரள அரசு காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயித்துள்ளது. ஆனால் அதிமுக அரசு என்ன செய்துள்ளது?
* விவசாயிகள் பாதுகாப்புச் சட்டங்களையும் கொண்டு வர துணிச்சலும் இல்லை; டெண்டர்! கமிஷன்! தவிர எதைப்பற்றியும் அக்கறையும் இல்லை.
* தீபாவளிப் பண்டிகை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மத்திய பாஜ., அரசு தடுக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும்.
* அதிமுக அரசு கொண்டு வரவில்லையென்றால் திமுக ஆட்சி காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வரும். விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். அவர்களின் துயர் துடைப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் படிப்படியாக மேற்கொள்வோம்! இது உறுதி.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE