நடிப்பு, பாடல், விளையாட்டு என பல திறமைகள் இருந்தாலும், அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாதபோது, தன்னுள் விளைந்த திறனை அடையாளம் கண்டு நேசித்து, தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார் ஈரோடு நிவேதா.
பள்ளிப் பருவத்தில் வாலிபால் வீராங்கனை, திறமையான பாடகர், நவரசம் ஊறும் நடிகையென நிரூபித்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர், எல்லோரையும் போல படிப்பில் கவனம் செலுத்த பாடம் எடுத்தனர். வேறுவழியின்றி அதற்கேற்பவும் தன்னை மாற்றிக் கொண்டார். இப்படி அனைத்திலும் ஆல் ரவுண்டராக வலம் வந்துள்ளார் இந்த எம்.பி.ஏ., பட்டதாரி.திருமணம் முடிந்ததும் வீட்டுக்குள் ஒளியென இருக்காமல், உலகிற்கே தனது திறனை பிரகாசிக்க செய்ய வேண்டும் என எண்ணினார்.
கல்லுாரி ஆசிரியராக பணியாற்றிய அவர், விழா ஒன்றில் ஒரு பங்கேற்பாளரை அலங்காரம் செய்துள்ளார். இதில்தான் வெளிப்பட்டது அவரது அழகியல் திறன். அந்த அலங்காரம் அனைவரையும் கவர்ந்ததால், அதுவே அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.அப்போதுதான் தனக்குள் இருந்த, அழகியல் திறனை அடையாளம் கண்டார். உடனே அந்தக் கலையில் படித்து முடித்து 'ப்ரைடல் மேக்கப்' கலைஞரானார். அப்போது அவர் முன் காத்திருந்தன அடுக்கடுக்கான சவால்கள். எப்போதுமே மேக்கப், பியூட்டிஷனுக்கு போட்டிகள் அதிகம்.
இதனால் ஒப்பனை கலைஞராக (மேக்கப் ஆர்ட்டிஸ்ட்) தன்னை நிலைநிறுத்த பல சிரமங்களை அனுபவித்தார். இப்போது கைகொடுத்தது அவரது மனித வள மேம்பாட்டு படிப்பு. அத்துறையிலும் பணியாற்றிய அனுபவம் பெரிதும் உதவியது.அந்த அனுபவத்தை தொழிலில் பயன்படுத்தியால் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்தது. வாடிக்கையாளரை கவரும் விதம், தொழில் நேர்த்தி, அணுகும் முறையால் மெல்ல முன்னேறினார். நாட்கள் செல்ல செல்ல திருமணம் முதல் விருந்தளிப்பு விழா வரை தொடங்கிய மேக்கப் ஆர்டிஸ்ட் பயணம், இன்று சினிமா பிரபலங்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்டாக மாறிவிட்டார் நிவேதா.
ப்ரைடல் மேக்கப், பார்ட்டி, விருந்தினர், ஏர்ப்ரஷ் மேக்கப் என ஒப்பனை கலையில் யாரும் தனக்கு ஒப்பில்லை என்று கலக்குகிறார். ஆண் துணையிருந்தால் பெண்கள் எந்த துறையிலும் சாதிக்க முடியும். பெண்களுக்கு திருமணம் முடிந்தாலும் தன் திறமைகளை தனது குடும்பத்தார் ஒத்துழைப்புடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முயற்சிக்க வேண்டும் என்கிற நிவேதா, சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் முன்னுதாரணமே.
இவரை பாராட்ட 97897 32019.
- சம்யூ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE