மாய வலை... சிக்குமா மாமூல் முதலை?| Dinamalar

மாய வலை... சிக்குமா மாமூல் முதலை?

Added : நவ 03, 2020
தீபாவளி பர்ச்சேஸ்க்கு முக கவசம் அணிந்து கொண்டு, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர். கமிஷனர் அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''விஜிலென்ஸ் விசாரணையில் சிக்குன இன்ஸ்., மறுபடியும் கோவைக்கு, 'போஸ்டிங்' வாங்கிட்டு வந்திருக்காராமே,'' என்றாள்.''யெஸ், உண்மைதான். சரவணம்பட்டியில் இருந்தப்ப, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பிடிச்ச விவகாரத்தில், விஜிலென்ஸ் விசாரணை
மாய வலை... சிக்குமா மாமூல் முதலை?

தீபாவளி பர்ச்சேஸ்க்கு முக கவசம் அணிந்து கொண்டு, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர். கமிஷனர் அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''விஜிலென்ஸ் விசாரணையில் சிக்குன இன்ஸ்., மறுபடியும் கோவைக்கு, 'போஸ்டிங்' வாங்கிட்டு வந்திருக்காராமே,'' என்றாள்.

''யெஸ், உண்மைதான். சரவணம்பட்டியில் இருந்தப்ப, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பிடிச்ச விவகாரத்தில், விஜிலென்ஸ் விசாரணை நடத்தி வேற ஊருக்கு மாத்தினாங்கள்ல, அவரே தான்! ஆளுங்கட்சி செல்வாக்குல திரும்பி வந்திருக்காரு,'' என்றபடி, லங்கா கார்னர் பாலத்தை கடந்தாள் சித்ரா.
அப்போது, தி.மு.க., நிர்வாகி ஒருவரின் கார், வேகமாக கடந்து சென்றது. அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, தி.மு.க., நிர்வாகி பையா கவுண்டர் வீட்டில், மூணு நாள் வருமான வரித்துறை சோதனை செஞ்சாங்களே. ஏதாச்சும், 'அப்டேட்' இருக்கா,'' என, நோண்டினாள்.
''அவரு வீட்டுக்கு யாரு வந்து உதவி கேட்டாலும், கரன்சியை அள்ளி வீசுவாராம். ஒரே வாரத்துல பல லட்சம் ரூபாயை அள்ளி அள்ளி கொடுத்திருக்காரு. ஈரோட்டை சேர்ந்த கல்லுாரி நிர்வாகி ஒருத்தரு, இவருக்கு நெருக்கமாம். பணம் பட்டுவாடா விவகாரங்களை நோண்டி, நோண்டி விசாரிச்சிருக்காங்க. இந்த விஷயத்துல என்ன நடந்துச்சுன்னு, வருமான வரித்துறையும் வெளிப்படையா அறிவிக்காம, கமுக்கமா இருக்கு,'' என்றபடி, கார்ப்பரேஷன் வளாகத்துக்குள் வந்த சித்ரா, ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள்.
பொறியாளர் ஒருவர், கோப்புகளை எடுத்துக் கொண்டு வேக வேகமாக சென்று கொண்டிருந்தார். அதை கவனித்த மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன்ல எந்த வேலை செய்றதா இருந்தாலும், 'எம்' புக் ரொம்ப முக்கியம். அதாவது, 'மெஷர்மென்ட் புத்தகம்'னு சொல்வாங்க. அந்த புக் இல்லாமலேயே, சில இடங்களில் வேலை நடந்திருக்காம். வேலை முடிஞ்சதுக்கப்புறம், 'புக்' தயாரிச்சு, பணம் எடுத்திருக்காங்க,''
''இது சம்பந்தமா, ரெண்டு உதவி பொறியாளர்கள் மீது புகார் வந்திருக்கு; அவர்களிடம் உயரதிகாரிகள் விளக்கம் கேட்டிருக்காங்களாம்,'' என்றாள்.
''அது சரி, ஒரு இன்ஜினியர் ஒதுங்கிட்டாராமே,''
''ஆமாக்கா, ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற ஒப்பந்ததாரர் எடுத்த வேலைக்கு, சாதகமா கோப்பு தயாரிக்கச் சொல்லி, நெருக்கடி கொடுத்திருக்காங்க. அதெல்லாம் முடியாதுன்னு சொல்லியிருக்காரு. இவரு, நமக்கு சரிப்பட்டு வர மாட்டாருன்னு, ஒதுங்கச் சொல்லிட்டாங்களாம். இப்ப, புது அதிகாரியை நியமிச்சிருக்காங்க,''
''ஓ... அப்படியா,'' என்ற மித்ரா, ''கிழக்கு மண்டல கார்ப்பரேஷன் ஆபீசுல, மக்களிடம் வரி வசூலிச்ச தொகையில், 20 லட்சம் ரூபாயை சுருட்டினதா சொன்னாங்கள்ல, 20 வார்டு கோப்புகளையும் ஆய்வு செஞ்சா, ஒரு கோடி ரூபாயை தாண்டுமாம். கார்ப்பரேஷன் ஆபீசே கதிகலங்கி போயிருக்கு. ஆனா, இன்னமும் போலீசுல புகார் கொடுக்காம, எதுக்கு, 'வெயிட்' பண்றாங்கன்னு தெரியலை,''''கார்ப்பரேஷன் சம்மந்தமா, நானும் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சொல்றேன் கேளு,'' என்ற சித்ரா, ''டெபுடேஷன் முறையில், நம்மூருக்கு வந்திருக்கிற அதிகாரிகளில், மூணு வருஷத்துக்கு மேல், இங்கேயே இருக்கறவங்களை, அந்தந்த ஊருக்கு திருப்பி அனுப்பச் சொல்லி, சென்னையில் இருந்து உத்தரவு வந்திருக்காம். எத்தனை பேரை விரட்டி விடப் போறாங்களோன்னு, அதிகாரிகள் தரப்பில் ஆடிப் போயிருக்காங்க,'' என்றபடி, ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்குள் நுழைந்தாள் சித்ரா.
அவளை பின்தொடர்ந்த மித்ரா, ''என்னக்கா, இவ்ளோ கூட்டம் இருக்கு. பண்டிகைக்கு ஜவுளி எடுக்க வந்தா, நோயை வாங்கிட்டு போயிருவோம் போலிருக்கே,'' என்றபடி, உஷாராக, சானிடைசரை கைகளில் தடவிக் கொண்டாள்.
''மித்து, ஜவுளிக்கடையில் கூட்டமா இருந்துச்சுன்னு, ரெண்டு கடைகளுக்கு கார்ப்பரேஷன் அதிகாரிங்க, 'பைன்' போட்டிருங்காங்க, தெரியுமா,'' என்றாள் சித்ரா.
''அக்கா, அதெல்லாம், பண்டிகை நேரத்துல, போட்டி நிறுவனங்களின் வர்த்தகத்தை முடக்குறதுக்கு, சிலர் செய்ற வேலை. வரைபட அனுமதிக்கு மாறா, கட்டடம் கட்டியிருக்கறதாச் சொல்லி, போன வருஷம் தீபாவளி சமயத்துல, ஒரு கடையை, 'சீல்' வச்சாங்க.
சில வருடங்களுக்கு முன்னாடி, ஒரு கடையில் ஐ.டி., ரெய்டு நடந்துச்சு. வியாபார தந்திரம்ங்கிற பேருல, போட்டி நிறுவனங்களை ஒழிக்கிற வேலையில் சிலர் ஈடுபடுறாங்க. அது தெரியாம, அரசாங்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்குறாங்க,''
''அப்படியா, இந்த பிரச்னையில் இவ்ளோ விஷயம் இருக்குதா,'' என வாயை பிளந்த சித்ரா, பெண்கள் பகுதிக்குள் நுழைந்தாள்.
இந்த வருஷத்துக்கான பேஷன் ஆடை ரகங்களை கேட்ட மித்ரா, ''பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துல எந்த வேலை செஞ்சாலும், 15 'பர்சன்டேஜ்' கமிஷன் கொடுக்கணுமாமே. ஒப்பந்ததாரர்கள் கண்ணீர் வடிக்கிறதா சொன்னாங்க,'' என, 'ரூட்' மாறினாள்.
''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை, எல்லா தரப்புக்கும் படியளக்க வேண்டியிருக்குதாம். டெண்டர் ஒதுக்கி, ஒர்க் ஆர்டர் கொடுக்கும்போதே, கமிஷன் தொகையை வெட்டச் சொல்லி, சிலர், நெருக்கடி கொடுக்குறாங்களாம்,''
''கவர்மென்ட் வேலைன்னாலே, இப்படி தான், இருக்கும் போலிருக்கு,'' என, சலித்துக் கொண்டே மித்ரா, பலாசோ பேன்ட்ஸ் ரகத்தை தேர்வு செய்து, பில்லுக்கு அனுப்பினாள்.
பட்டுச்சேலை பிரிவுக்குள் நுழைந்த சித்ரா, ''லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்துன விவகாரத்துல, ஒருத்தரை, கிணத்துக்கடவு தாலுகாவுக்கு மாத்திட்டாங்களாமே,'' என, கிளறினாள்.
''அதுவா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வடக்கு தாசில்தார் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர், ரெய்டு நடத்துனாங்கள்ல, 10 பேர் மேல வழக்கு பதிவு செஞ்சு, கலெக்டருக்கு அறிக்கை கொடுத்திருக்காங்க. சர்வேயரா இருந்தவரை, கிணத்துக்கடவுக்கு மாத்தியிருக்காங்க. மத்தவங்களுக்கு உத்தரவு தயாராகிட்டு இருக்குதாம்,''
''இதே மாதிரி, மதுக்கரை தாலுகா ஆபீசுல இருக்கற ஒரு அதிகாரி, பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறதா புகார் வந்திருக்கு. இது சம்மந்தமா, விசாரணை நடந்துக்கிட்டு இருக்குதாம்,''
''மித்து, மதுக்கரை ஏரியாவுல நானும் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். பத்திரப்பதிவு துறையில் இருக்குற அந்த அதிகாரி, ஆளுங்கட்சி வி.ஐ.பி., உதவியாளருக்கு உறவினராம். அதனால, வசூலில் பட்டையை கிளப்புறாராம்,''
''என்னப்பா, இப்படிச் சொல்றே! சேலத்துல பத்திரப் பதிவு துறை டி.ஐ.ஜி.,யையே, லஞ்ச ஒழிப்பு துறையினர் அமுக்கியிருக்காங்க. இங்க, செய்ய முடியாதா, என்ன,''
''அவர விடவும் கலெக் ஷன்ல, 'செல்வாக்கான' அதிகாரி ஒருத்தரு, நம்ம மாவட்டத்துல இருக்காரு. மாசம் பல லகரம் மாமூல் கலெக்ஷன் போடுறாராம். அதுல ஒரு பார்ட், உள்ளூர் விஜிலன்ஸ் போலீசுக்கும் தர்றதா நெருங்கினவுங்க கிட்டவே, துணிச்சலா சொல்றாராம்... இது தெரிஞ்ச சென்னை தலைமையிட விஜிலன்ஸ் டீம், மாமூல் முதலைய பிடிக்க, மாய வலை விரிச்சிருக்காம்... சிக்குதான்னு பார்ப்போம்...'' என்றவாறே சித்ரா, ரோஸ் கலரில் பட்டுச்சேலை தேர்வு செய்தாள்.
''ஆளுங்கட்சியிலும் குடும்ப அரசியல் தலைதுாக்க ஆரம்பிச்சிடுச்சாம். 'வடவள்ளிக்காரர்' மனைவிக்கு, கட்சியில் மாவட்ட பொறுப்பு கொடுத்திருக்காங்க; ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருக்காங்க. ஆனா, ஆளுங்கட்சி சார்பில் நடந்த கறுப்புச்சட்டை போராட்டத்துக்கு, எட்டி கூட பார்க்கலையாம்; கட்சிக்காரங்க கொந்தளிக்கிறாங்களாம்...'' என்றாள் மித்ரா.
''மித்து, பணம் இருந்தால் போதும்னு நினைக்கிறாங்க போலிருக்கு,'' என்றபடி, பில்லுக்குரிய பணத்தை கொடுத்தாள் சித்ரா.
பின், ஜவுளியை வாங்கிக் கொண்டு, கடையை விட்டு, வெளியே வந்த இருவரும், கார்ப்பரேஷன் ஆபீசை நோக்கி, நடக்க ஆரம்பித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X