சென்னை, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை, ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய, பல்லாவரம், கீழ்க்கட்டளை, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஆகிய மூன்று ஏரிகளில், மண் கொட்டி நிரப்பி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு, நீர்நிலை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள பல்லாவரம் நகராட்சியில், 10 ஆண்டுகளாக, அடுக்குமாடி குடியிருப்பு, கல்வி நிலையம், வணிக வளாகம், நகைக்கடை, ஓட்டல், திருமண மண்டபம் என, அசுர வளர்ச்சிஅடைந்து வருகிறது.இதற்கேற்ப வாகன போக்குவரத்தும், அங்கு பல மடங்கு அதிகரித்து விட்டது. இதை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி., - ராஜிவ் காந்தி சாலைகளுடன், பரங்கிமலை - மடிப்பாக்கம், வேளச்சேரி - மேடவாக்கம் சாலைகளை இணைக்கும் வகையில், ஒரு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.அதன்படி, 2003ல், 10.6 கி.மீ., நீளத்திற்கு, நான்கு வழிப்பாதை கொண்ட, பல்லாவரம் - துரைப்பாக்கம் இடையே, ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை அமைக்கப்பட்டதால், கிழக்கு கடற்கரை, ராஜிவ் காந்தி சாலை வழியாக செல்லும் வாகனங்கள், விரைவாக, ஜி.எஸ்.டி., சாலையை அடைகின்றன.

அதேபோல், பல்லாவரம், குரோம்பேட்டை, குன்றத்துார், மீனம்பாக்கம், பூந்தமல்லி, பம்மல் போன்ற சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களும், கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்கின்றனர்.பொதுவாக, ஒரு சாலை அமைக்க திட்டமிடும் போது, வழிப்பாதையில் நீர்நிலைகள் குறுக்கிட்டால், நீர்நிலைகளை பாதிக்காத வகையில், 'எலிவேட்டர்' எனப்படும், உயர்மட்ட பாலம் அமைத்து, திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை திட்டத்தில், பல்லாவரம், கீழ்க்கட்டளை மற்றும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஆகிய மூன்று ஏரிகள் குறுக்கிட்டன.இந்த திட்டத்தில், உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு பதில், ஏரியில் மண் கொட்டி நிரப்பி, சாலை அமைத்துள்ளனர். இதனால், மூன்று ஏரிகளும், இரண்டாக பிரிந்து, ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டும் தளம் என, அழிவை நோக்கி பயணித்தன.
நீர்நிலை ஆர்வலர்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக, கீழ்க்கட்டளை, நாராயணபுரம் ஏரிகள், ஓரளவு மீட்கப்பட்டன. பல்லாவரம் ஏரியில், இன்னும் ஆக்கிரமிப்போடு, குப்பை கழிவுகளை அகற்ற முடியவில்லை.சாலை திட்டத்திற்காக இரண்டாக பிரிக்கப்பட்ட ஏரிகளில், தெற்கில் இருந்து வடக்கிற்கு தண்ணீர் செல்லும் வகையில், சிறுபாலங்கள் அமைத்திருந்தாலும், ஏரியின் பழைய தோற்றமும், பரப்பளவும் பெருமளவில் குறைந்துவிட்டன. நெடுஞ்சாலை துறை ஒரு பக்கம் ஏரியை கூறுபோட, பல்லாவரம் நகராட்சியின் பாதாள சாக்கடை குழாயும், ஏரியை ஒட்டி, சாலை ஓரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகரிக்கும் வாகன போக்குவரத்து காரணமாக, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை, ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, தற்போது நடந்து வருகிறது. இதனால், மூன்று ஏரிகளிலும், மேலும் மண்ணை கொட்டி நிரப்பி, சாலையை விரிவாக்கம் செய்து வருகின்றனர்.

நீர்நிலைகளின் நடுவில் சாலை அமைப்பதற்கும், தொடர்ந்து விரிவாக்கம் செய்வதற்கும், நீர்நிலை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளின் அவசியத்தை ஐகோர்ட்டும், பசுமை தீர்ப்பாயமும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் நிலையிலும், அரசு இயந்திரங்கள், அதை பாழாக்குவதிலேயே குறியாக செயல்படுகின்றன. இதை கண்டுக்கொள்ளாமல் விட்டால், எதிர்காலத்தில், பல்வேறு பணிகளுக்காக, ஏரி மேலும் கூறுபோட்டு, ஒரு கட்டத்தில் மாயமாகிவிடும் என்பதில் மாற்றமில்லை.அதனால், மூன்று ஏரிகளையும் பாதுகாக்கும் வண்ணம், நடுவில் போடப்பட்டுள்ள சாலைகளை அகற்றிவிட்டு, பாலம் அமைத்து திட்டத்தை செயல்படுத்தவும், ஏரியை பழைய பரப்பளவிற்கு முழுமையாக மீட்கவும், நெடுஞ்சாலைத் துறையை கைவசம் வைத்துள்ள, முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.7 கோடியில் 'பயோ மைனிங்'
பல்லாவரம் நகராட்சியில் குப்பை கொட்ட இடமில்லாததால், 30 ஆண்டுகளுக்கு முன், ஏரியை ஒட்டியுள்ள, கணபதிபுரம் சுடுகாட்டில் கொட்டினர். நாளடைவில், குப்பை அதிகரித்ததால், ஏரியினுள் கொட்டினர். தற்போது, ஏரியில் 5 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்து குப்பை கொட்டி, கிடங்காக மாற்றிவிட்டனர்.கிடங்கில், ஒரு லட்சம் டன் குப்பை தேங்கியுள்ளது. குப்பை கிடங்கை, 'பயோ மைனிங்' முறையில் பிரித்து, அகற்றும் பணி துவங்கியுள்ளது. இத்திட்டம், 7 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. பணியை, 'சிக்மா' என்ற நிறுவனம் செய்து வருகிறது. ஜனவரியில் இப்பணி துவக்கப்பட்டது. இதுவரை, 72 ஆயிரம் டன் குப்பை பிரித்து அகற்றப்பட்டுள்ளது. டிசம்பருக்குள், தண்ணீரின் மேற்பகுதியில் உள்ள குப்பை அகற்றப்படும். தண்ணீருக்கு அடியில் உள்ள குப்பை, அடுத்த ஆறு மாதங்களில் பிரித்து அகற்றப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்நிலைகள் மீது சாலை அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பாலம் அமைப்பது தான் முறை. தற்போது, அப்படி தான், சாலைகள் போடப்படுகின்றன. பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையை பொறுத்தவரை, 17 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அப்போது, ஏரிகளின் நடுவில் மண் கொட்டி சாலை அமைத்துள்ளனர். இந்த ஏரிகளில், தற்போது பாலம் அமைப்பதற்கு சாத்தியமில்லை.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
பல்லாவரம் ஏரியில், ஒரு புறம் குப்பை மேடாகவும், மறுபுறம் ஏரியாகவும் உள்ளது. நீர்நிலைகளை அரசே ஆக்கிரமித்து, சாலை போட்டது முறையற்றது. போரூர் ஏரியில், பாலத்தை அமைத்தது போல், இந்த ஏரிகளிலும் பாலம் அமைத்து, சாலை போட்டிருந்தால், பாராட்டியிருக்கலாம். 'தினமலர்' போன்ற நாளிதழ்கள், பல ஆண்டுகளாக, நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த செய்தி வெளியிட்டு வருகின்றன. அப்படியிருந்தும், ஏரியில் சாலையை விரிவாக்குவது வருந்தத்தக்கது. இந்த ஏரிகளை பாதுகாக்கும் வகையில், மேம்பாலத்தின் மூலமாக சாலை அமைக்க வேண்டும்.
வி. சந்தானம், 83,
நீர்நிலை ஆர்வலர், குரோம்பேட்டை.
நீர்நிலைகள் மீது சாலை அமைக்கும் போது, மேம்பால வழிமுறையை தான் பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால், அந்த ஏரிகளின் கொள்ளளவு குறையாது. பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை அமைத்தபோது, பல்லாவரம், கீழ்க்கட்டளை, நாராயணபுரம் ஏரிகளின் நடுவில், மண் கொட்டி சாலை அமைத்துள்ளனர்.17 ஆண்டுகளுக்கு முன், இச்சாலை அமைக்கப்பட்டதால், அப்போது, எந்த அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்தினர் என்பது தெரியவில்லை.
பொதுப்பணி துறை அதிகாரிகள்
-- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE