சென்னை: நவ.,16ல் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவசர கோலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நவ.,16ல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அவசரகோலத்தில் அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு, விடுதி, உணவு போன்றவை குறித்த குழப்பங்கள் நிலவுகின்றன. கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டதா?
துவக்க பள்ளிகளை விட உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் அதிக பாதிப்பு, ஆசிரியர்களுக்குள் கொரோனா பரவல் அதிகம் போன்ற ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.இத்தகைய அறிவிப்புகளில் எடப்பாடி அதிமுக அரசின் நிர்வாக குழப்பம் தலைதூக்கி நிற்கிறது. தனது தொடர் தோல்விகளுக்கு, ‛மக்கள் ஒத்துழைக்கவில்லை' என்று பழி சுமத்துவது முதல்வருக்கு கைவந்த கலை. வடகிழக்கு பருவமழை, தட்ப வெப்ப மாறுபாடுகள், பருவ கால நோய்கள் எல்லாம் கொரோனா தொற்றுடன் சேர்ந்து கொண்டு மாணவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தினை விளைவிக்கக்கூடும்.

பள்ளிகள் திறப்பில் அவசர கோலமான அறிவிப்பு ஏன்? கொரோனா குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா? பெற்றோர்- ஆசிரியர் - டாக்டர்களுடன் ஆலோசனைகளை முதல்வர் செய்தாரா?பொங்கல் விடுமுறை முடிந்து 2021 ஜனவரி இறுதியில், அப்போதிருக்கும் சூழ்நிலைகளை ஆய்வு செய்து பள்ளிகளை திறக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE