மும்பை: 52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், ‛ரிபப்ளிக் டிவி' ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது, தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும், அர்னாப் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், கடந்த 2018 ம் ஆண்டு ‛ரிபப்ளிக் டிவி' நிறுவனம் தர வேண்டிய நிலுவை தொகை கிடைக்கவில்லை எனக்கூறி, 53 வயதான இன்டீரியர் டிசைனரான அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்ததாக, தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை அலிபாக் போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி, அன்வய் நாயக்கின் மகள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு புகார் அளித்ததாகவும், இதனால் இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தப்படும் என மஹாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஸ்முக் தெரிவித்திருந்தார்.
அர்னாப் மீது தாக்குதல்
இதனிடையே தன்னை மும்பை போலீசார் தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார் தெரிவித்துள்ளார். தனது மனைவி, மகன், மாமனார், மாமியார் ஆகியோரையும் போலீசார் தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இது குறித்த காட்சிகளை, ‛ரிபப்ளிக் டிவி' ஒளிபரப்பியது.
கண்டனம்
அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு, கண்டனம் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியும் மற்றொரு முறை ஜனநாயகத்தை அவமானப்படுத்தியுள்ளது. அர்னாப் கோஸ்வாமி மற்றும் ‛ரிபப்ளிக் டிவி' மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கை, ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல். இது அவசர நிலையை பிரதிபலிக்கிறது. பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்க்க வேண்டும்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: அர்னாப் கைது செய்யப்பட்டது, பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறது. மஹாராஷ்டிராவி் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
மத்திய ரவி சங்கர் பிரசாத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அர்னாப் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது, தேவையற்றது. கவலை தரும் விஷயம். 1975 அவசர நிலையை எதிர்ப்பதுடன், பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடி வருகிறோம். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் மஹாராஷ்டிரா அரசின் செயலை கண்டு, காங்கிரஸ் மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறுகையில், மஹாராஷ்டிராவில் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. யாருக்கு எதிராகவும் ஆதாரங்கள் கிடைத்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம். உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்தவுடன், யாருக்கு எதிராகவும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE