திண்டுக்கல் : 'வீணாகும் பிளாஸ்டிக் டப்பாவில் டார்ச் லைட், பாட்டில் மூடியில் கிரைண்டர்' போன்றவற்றை செய்து அசத்துகிறார், திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., சி.பி.எஸ்.இ., பள்ளி 2ம் வகுப்பு மாணவர் வினய் கார்க்கி.
கொரோனாவால் கடந்த 6 மாதமாக பள்ளிகள் மூடியுள்ளன. வகுப்பு நேரம் தவிர, மற்ற நேரங்களில் பெரும்பாலான மாணவர்கள் அலைபேசி, இன்டர்நெட்டில் மூழ்கி கிடக்கின்றனர். இவர்களிடையே ஊரடங்கு நேரத்திலும் ஆர்வம் அடங்காமல் நேரத்தை பயனுள்ளதாக மாற்றியுள்ளார் மாணவர் வினய் கார்க்கி.'டிவி', வாஷிங் மிஷின், டூவீலர் என பலவற்றையும் தயாரிக்கிறார். பிரேக் பிடித்ததும் டூவீலர் எப்படி நிற்கிறது என்று எழுந்த சந்தேகமே இவருக்குள் இருந்த குட்டி விஞ்ஞானியை எட்டிப் பார்க்க வைத்துள்ளது.

தேவையில்லை என துாக்கிப்போடும் பொருட்களைக் கொண்டு, சோலார் விளக்கு, மோட்டார் பொருத்திய படகு, காற்றாலை மின்சாரம் தயாரிப்பு, பிளாஸ்டிக் பாட்டிலால் பலுானை எளிதாக ஊதுவது, பாட்டில் மூடியில் கிரைண்டர், சுற்றிக்கொண்டே சுழலும் பேன், பிளாஸ்டிக் டப்பாவில் டார்ச் லைட் என 'யூ டியூப்'பை பார்த்து ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இதுதவிர படிப்பு, கலைப் போட்டிகளிலும் பரிசுகளை வென்றுள்ளார்.

மாணவர் வினய் கார்க்கி கூறுகையில், ''எனக்குள் 'ஏன்' என்று எழுந்த சந்தேகமே, புதிதாக தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை துாண்டியது. இன்னும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்குவேன். அலைபேசியில் நேரத்தை வீணாக்காமல் அனைவரும் புதியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.
இவரை வாழ்த்த 99944 87452.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE