மும்பை: அர்னாப் கோஸ்வாமி கைது தொடர்பாக, பா.ஜ., - காங்., இடையே, வார்த்தை போர் மூண்டுள்ளது.
'மாநில அரசு, தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை மீண்டும் அவமானப்படுத்தி உள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தெரிவித்தார்.
'ராகுல் மற்றும் சோனியா செய்துள்ள இந்த தவறை, மக்கள் மறக்க மாட்டார்கள்' என, பா.ஜ., தேசியத் தலைவர், ஜே.பி.நட்டா 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'இந்த கைது நடவடிக்கை, பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்' என, மத்திய அமைச்சர்கள், ஜெய்சங்கர், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

பா.ஜ.,வின் கண்டனங்கள் குறித்து, காங்., செய்தித் தொடர்பாளர், சுப்ரியா ஷ்ரின்டே கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் மிர்ஸாபூர் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு, பல ஆண்டுகளாக, சாப்பாத்தியும், உப்பும், உணவாக வழங்கப்பட்டு வந்த ஊழலை வெளிக் கொண்டு வந்த பத்திரிகையாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவரை, பா.ஜ., அரசு பல மாதங்கள் சிறையில் அடைத்தது.
உ.பி.,யின் வாரணாசியில் உள்ள ஒரு கிராமத்தின் அவல நிலையை வெளிக் கொண்டு வந்த, பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா என்பவர் மீது, பா.ஜ.,தேசத் துரோக வழக்கை பதிவு செய்தது. அப்போதெல்லாம் நசுக்கப்படாத பத்திரிகை சுதந்திரம், இப்போது நசுக்கப்படுவதாக பா.ஜ., அழுவது, விசித்திரமாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.