கராச்சி : பாகிஸ்தானில், கோவிலை சூறையாடி, ஹிந்து குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்த வந்த கும்பலை, தடுத்து நிறுத்தி காப்பாற்றிய முஸ்லிம்கள் செயல் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். மொத்தம், 22 கோடி மக்கள் தொகை உள்ள இங்கு, இரண்டு சதவீத ஹிந்து மக்களே உள்ளனர்.இங்குள்ள பெரும்பாலான ஹிந்துக்கள், சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இங்கு, ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சிந்து மாகாணத்தில், அதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று அரங்கேறியது. ஷீதா தாஸ் என்ற பகுதியில், 300 ஹிந்து குடும்பங்களும், 30 முஸ்லிம் குடும்பங்களும் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு அருகே உள்ள ஹிந்து கோவில், ஒரு கும்பலால் நேற்று சூறையாடப்பட்டது. இதில், அங்கிருந்த மூன்று சிலைகளும் சேதமடைந்தன.

கோவிலை சேதப்படுத்திய அந்த கும்பல், ஷீதா தாஸ் பகுதியில் வசிக்கும் ஹிந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தச் சென்றனர். அந்த பகுதியின் நுழைவு வாயிலில், அவர்கள் திரண்டனர். எனினும், அப்பகுதிவாழ் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு, அந்த கும்பலை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். பின்னர், அங்கிருந்த, 60க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்களை, நகரின் வேறு சில பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டனர்.