பிரசாந்த் கிஷோர் என்ற மஹானுபாவரின், 'டியூனுக்கேற்ப' நடனமாடிக் கொண்டிருக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்நாள் தலைவருமான ஸ்டாலின், மக்கள் தன்னை ஆதரித்து, ஓட்டளித்து, அடுத்த முதல்வராக, தேர்ந்
தெடுத்து விடுவர் என்ற கனவில் மிதந்து கொண்டு இருக்கிறார். அவரது கனவை நிறைவேற்றும் முகமாக, கடந்த கால, தி.மு.க., ஆட்சியின் போது, அந்த கட்சியின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நுாற்றுக்கணக்கான சாதனைகளில், இரண்டே இரண்டு சாதனைகளை மட்டும், மக்கள் பார்வைக்கு எடுத்துக்காட்ட விழைகிறேன்.
வாக்குறுதி
தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஓட்டுகளை கவர்வதற்காக, 'வானத்தை வானவில்லாக வளைப்போம்; மணலைத் தாம்புக் கயிறாக திரிப்போம்' என்று வண்ண வண்ண வாக்குறுதிகளை அள்ளி வீசும். தி.மு.க.,வும், 'தேர்தல் வாக்குறுதி' என்ற தலைப்பில், ஒரு புத்தகத்தையே வெளியிட்டு, குதுாகலித்து, கும்மாளமிடும்.சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகர காவல் துறை உயர் அதிகாரியாக இருந்தவர், -ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'சென்னை மாநகரத்தில் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாலும், அந்த இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவுக்குள் ஒரு குடிசைப் பகுதி இருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த, 1967 சட்டசபை பொதுத் தேர்தலில், மூதறிஞர் ராஜாஜியின் முயற்சியால் தோன்றிய கூட்டணியின் பக்க விளைவாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்தது; அண்ணாதுரை முதல்வரானார்.
அவரால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்க இயலவில்லை; இறந்து விட்டார்; கருணாநிதி முதல்வரானார்.சென்னை நகரம் முழுதும் வியாபித்திருந்த குடிசைப் பகுதிகள், கருணாநிதி கண்களை உறுத்தின. சென்னை நகரை, குடிசைகள் அற்ற நகரமாக ஆக்க திட்டம் தீட்டினார். அது தான் குடிசை மாற்று வாரியம். 1971ல், இந்த வாரியம் உருவாக்கப்பட்டது.குடிசைகளுக்கு மாற்றாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, அவற்றில் குடிசை வாழ் மக்களை குடியமர்த்துவது தான் திட்டத்தின் நோக்கம். அந்த நோக்கத்தில், எந்த பழுதும் கூற முடியாது; நல்ல திட்டம் தான்.
சுதந்திரமடைந்து, 25 ஆண்டுகள் வரை, எந்த தீ விபத்திலும் சிக்காமலிருந்த சென்னை குடிசைப் பகுதிகள், தொடர்ந்து ஒவ்வொன்றாக எரிய ஆரம்பித்தன. அந்த தீ விபத்துகளுக்கு, 'பாஸ்பரஸ்' என்ற, தானாகவே சூரிய ஒளிபட்டு எரியும் பொருளே காரணம் என்று வதந்தி பரவியது. கூடவே, 'ஆட்சியை இழந்த காங்கிரஸ்காரர்கள் தான், ஆங்காங்கே குடிசைகளைக் கொளுத்திக் கொண்டிருக்கின்றனர்' என்ற குற்றச்சாட்டும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.
குடிசைப் பகுதி
எந்த காங்கிரஸ் கட்சி மீது, 'குடிசைகளைக் கொளுத்தியவர்கள்' என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அந்த காங்கிரஸ் கட்சி தான், 'ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்காமல் ஓய மாட்டோம்' என்று இப்போது குதித்துக் கொண்டிருக்கிறது.இந்த குடிசை மாற்று வாரியம் துவங்கி, சென்னை நகரில் குடிசைகள் அப்புறப்படுத்தப் பட்டபோது, சென்னையில் அதிக பட்சமாக, 15 - 20 ஆயிரம் குடிசைகள் இருந்திருக்கலாம். அந்த, 20 ஆயிரம் குடிசைகளுக்கு மாற்றாக, 20 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அந்த குடிசை வாழ் மக்கள், அடுக்கு மாடிகளில் குடியமர்த்தப்பட்ட பிறகு, சென்னையில் ஒரு குடிசை கூட இருந்திருக்கக் கூடாதல்லவா? அப்படித் தான் இப்போது இருக்கிறதா; இல்லையே!குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களும் பெருகின. சென்னையில் புதுப்புது இடங்களில் குடிசைகளும் முளைத்துக் கொண்டே இருந்தன. 48 ஆண்டுகளாக கட்டுகின்றனர்; கட்டுகின்றனர்; கட்டிக் கொண்டே இருக்கின்றனர்; இன்னமும்
கட்டுவர்.
நகருக்கு ஒதுக்குப் புறமாக இருப்பது தான், சேரி என்று அழைக்கப்பட்ட குடிசைப் பகுதிகள். குடிசைகளில் வாழ்பவர்களை, ஊரோடு ஒத்து வாழ வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் துவங்கப்பட்டது தான், குடிசை மாற்று வாரியம்.வாரியக் குடியிருப்புகளில், தொடர்பு இல்லாதவர்கள் ஆக்கிரமித்து குடியேறத் துவங்க, ஒரிஜினல் குடிசை வாசிகளுக்கு, ஊரை விட்டு ஒதுக்குப் புறமாக, செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம், புதுப்பாக்கம், சோழிங்கநல்லுார் போன்ற புறநகர் பகுதிகளில், குடியிருப்புகள் கட்டப்பட்டு, வலுக்கட்டாயமாக, குடிசை வாசிகளை அங்கு குடியேற வைத்தனர்.
கட்டுமான பொருட்களை மட்டும், குறைந்த விலை ஒப்பந்த புள்ளிகள் வாயிலாக வாங்கி பணிகளை முடித்துக் கொண்டிருந்தனர். தி.மு.க., ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்து, அது வரை பொருட்களை மட்டுமே ஒப்பந்த புள்ளிகள் மூலம் வாங்கிக் கொண்டிருந்த முறைக்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது.மொத்த பணிகளையுமே, டெண்டர்கள் மூலம் முடிவு செய்யத் துவங்கினர். மொத்தப் பணிகளும் டெண்டர்கள் மூலம் முடிக்கும் முடிவுக்கு, தி.மு.க., அரசு வந்ததில் இருந்து தான், ஒவ்வொரு பணிக்கும், 'கமிஷன்' வாங்கும் நடைமுறையும் அமலுக்கு வந்தது. அந்த கமிஷன் தொகையானது, 10 சதவீதத்தில் துவங்கி, தற்போது, 45 சதவீதத்தில் வந்து நிற்கிறது. தற்சமயம் அந்த கமிஷன் சதவீதம், 50 சதவீதத்தை நெருங்கி விட்டதாக கேள்வி.
அது மட்டுமின்றி, உடன்பிறப்புக்களே, ஒப்பந்ததாரர்களாகும் நிலைமையும் அமலுக்கு வந்தது.
சமத்துவபுரம்
இப்படி, மக்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையைப் போர்த்தி, மாநில அரசு உலக வங்கியிடம் வாங்கிய கடன் தொகை தான், தற்போது, 4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.கழகத்தின் இந்த குடிசை மாற்று வாரிய வரலாறு ஒரு புறமிருக்க, சமத்துவபுரம் என்ற, கான்செப்டிலும் கழகம் தன் கை வரிசையை அமர்க்களமாக அரங்கேற்றி உள்ளது. ஜாதி ஒழிப்பு, வீட்டுவசதி என்ற இரு குறிக்கோளுடன் துவங்கப்பட்டது தான் சமத்துவபுரம்; 1996 - -2001 கால கட்டத்தில், தி.மு.க., ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் சமத்துவபுரம், 1998ல், மதுரை, திருமங்கலத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகள் என்ற பெயரில், கழக உடன்பிறப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஒதுக்கீடு, இப்படித் தான். 40 சதவீத தலித்துகள்; பிற்படுத்தப்பட்டோர், 25 சதவீதம்; இதர பிற்படுத்தப்பட்டோர், 25 சதவீதம். இவ்வாறு, 90 சதவீதம் போக, மீதி, 10 சதவீத வீடுகளில் மற்ற சமூகத்தினரும் வாழ்கின்றனர்.
அந்த, 10 சதவீத வீடுகளில் மற்ற சமூகத்தினர் என்றால், முதலியார்கள், செட்டியார்கள், நாடார்கள், நாயுடுகள், வன்னியர்கள், ரெட்டியார்கள் என, யாருக்கு ஒதுக்கப்பட்டது என்றால், அதற்கு புள்ளிவிபரம் இல்லை.
மேலும், அந்த, 145 சமத்துவப்புரங்களில், எத்தனை சமத்துவபுரங்களில் பிராமணர்கள் என்ற ஜாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றால், அதுவும் இல்லை. பிராமண சமூகத்தினர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் அல்லவே. அவர்களிலும் எத்தனையோ பொருளாதார வசதியற்ற ஏழைகள் இருக்கின்றனர் தானே; அவர்களும் இந்த நாட்டின் குடி மக்கள் தானே? அது மட்டுமா... அந்த சமத்துவபுரங்களில் பல சீரழிந்தும், புதர் மண்டியும், விரிசல்கள் கண்டும், இடிந்தும் மக்கள் வாழ தகுதியற்றவையாக உள்ளன. 100 சதவீத ஒப்பந்தத்தில், 45 சதவீத கமிஷன் போக, 55 சதவீதத் தொகையில் கட்டப்பட்டதாக கூறப்படும் அந்த கட்டடங்களின் லட்சணம் எப்படி இருக்கும்?
இப்படி, எந்த நேரத்தில் தலையில் இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளன. ஆங்கிலேயர்கள், 300 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடங்களின் நிலையையும், பொறியாளர் பென்னி குயிக் கட்டியுள்ள பெரியாறு அணையின் உறுதித் தன்மையையும், நம்மவர்களுக்கு தெரியவே இல்லை.கவுன்சிலர் தேர்தல் முதல், எம்.பி., எலெக் ஷன் வரை, எதற்கு தேர்தல் நடந்தாலும், தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், எந்த ஜாதி மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனரோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவரையே, ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளராக நிறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகம், ஜாதிகளை ஒழிப்பதற்காகத் தான், சமத்துவபுரம் கட்டியது.
ஜாதி மறையவில்லை
அதை இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், சமத்துவபுரங்களால் ஜாதிகள் ஒழியவில்லை. எப்படி, குடிசை மாற்று வாரியங்களால், குடிசைகள் மறையவில்லையோ அதுபோல, சமத்துவபுரங்களால், ஜாதியும் மறையவில்லை.மாறாக, ஜாதிய தலைவர்கள் தான் உருவாகி விட்டனர். இது தான், தி.மு.க., திட்டங்களின் உன்னதம்!மேலும், ஈ.வெ.ராமசாமி ஜாதிகளை ஒழித்தார் என்று, இப்போதும், 'பாவ்லா' காட்டுகின்றனர். ஜாதிகள் ஒழியவே இல்லையே!இது, எப்படி இருக்கிறதென்றால், 'என் மனைவி கோவிலுக்குப் போவாள்; சாமி கும்பிடுவாள்; அதை நான் தடுக்க மாட்டேன். ஆனால், நீயும், உன் மனைவியும், மற்ற குடும்ப உறுப்பினர்களும், கோவிலுக்கு செல்லாமல், சாமி கும்பிடாமல் இருக்க வேண்டும்' என்று சொல்வதற்கு ஈடாக இல்லையா?தி.மு.க.,வின் இந்த இரண்டு போதுமா; இன்னும் சொல்ல வேண்டுமா?தொடர்புக்கு: எஸ்.ராமசுப்ரமணியன் எழுத்தாளர் இ - மெயில்: essorres@gmail.com