ராஜிவ் கொலையாளிகள் விடுதலை விவகாரத்தில், தி.மு.க., - காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளதால், கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய, ஏழு பேரையும் விடுதலை செய்யும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு, சமீபத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரத்தில், ஸ்டாலினுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சி, கடும் எதிர்ப்பை காட்டத் துவங்கி உள்ளது.
இதுகுறித்து, தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:ராஜிவ் கொலையாளிகள் விடுதலை குறித்து, நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுதலை செய்தால், சிறைகளில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும், அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.நீதிமன்றம் விடுவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர், அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை செய்தவர்களை, குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டுமே தவிர, தமிழர்கள் என, அழைப்பது சரியல்ல.
அப்துல் கலாம், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, ஜீவானந்தம், ராமானுஜம் போன்றவர்களை, தமிழர்கள் என, அழைப்பது பெருமைக்குரியது. கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என, ஒரு இயக்கம் துவக்கினால், தமிழகத்தில் போலீஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், சட்டம் ஒழுங்கு வேண்டாம் என்ற, பொருளாகி விடும். எனவே, குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது, தமிழர் பண்பாடு ஆகாது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
அழகிரியின் அறிக்கையும், அதில் பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகளும், தி.மு.க.,வையும், அதன் தலைவர் ஸ்டாலினையும், கடுமையாக காயப்படுத்தி விட்டதாக தெரிகிறது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:
தி.மு.க., சார்பில், ராஜிவ் கொலை வழக்கில், சிறை தண்டனை பெற்ற, ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி உள்ளோம். கூட்டணி வேறு; கொள்கை வேறு. அவரவருக்கு ஒரு கொள்கை உள்ளது. காங்கிரஸ் சொல்வது அனைத்தையும் ஏற்க வேண்டும் என்று, கட்டாயம் கிடையாது.
காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது தெரிந்து தான், ஏழு பேரை விடுதலை செய்ய, அறிக்கை வெளியிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையில், 'கொலை செய்தவர்களை குற்றவாளிகள் என, கருத வேண்டுமே தவிர, தமிழர்கள் என, அழைப்பது சரியல்ல' என, அழகிரி தெரிவித்த கருத்துக்கு, பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா ஆதரவு அளித்துள்ளார். - நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE