வயலினை மீட்டி மெல்லிசை பாடல் மூலம் ரசிகனின் இருதயத்தை வருடிக்கொண்டு இருக்கிறார் 15 வயதான வயலின் இசை பாடகி கோவை தியா. சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்.
உங்களை பற்றி
கொஞ்சும் தமிழ் பேசும் கோயம்புத்துார் மாவட்டம், சூலுார் பொண்ணுங்க நான். திருப்பூரில் பிளஸ் 1 படிக்கிறேன். தந்தை ராஜ்மோகன், தாய் மஞ்சு.
கச்சேரியில் வயலின் ஆசை வந்தது எப்படி
சிறுவயதில் இருந்தே பாட்டு, நடனம் மீது ஆர்வம். 4வது வயதில் செவ்வியல் இசை, நடனம் கற்க துவங்கினேன். பாட்டின் மீது அதித ஆர்வம் உண்டு. கர்நாடக இசை பயிற்சி பெற்றேன். கச்சேரி ஒன்றில் பாடிய போது, சிறுமுகையை சேர்ந்த சிவகாமி வயலின் வாசிப்பில் மயங்கினேன். அன்று முதல் வயலின் மீது ஆர்வம் அதிகரித்தது. என் முயற்சியால் வயலின் வித்வான், சிறந்த பாடகியாக உயர்த்திக்கொள்ள துடிக்கிறேன். 'லைவ் ேஷா' இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.
முதல் காதலன் வயலினா, பாடலா
பல்வேறு மொழிகளில் வயலின் மூலம் பாடல்களை இசைத்தும், முன்னணி பாடகர்களின் பாடல்களை பாடியும், பக்தி பாடல்கள் மூலமும் என் இசை திறனை வளர்க்கிறேன். நான் முதலில் காதலித்தது பாடல் மட்டுமே. வயலின் இசையையும், பாடலையும் இணைத்து செல்வது கடினம். முறையாக இரண்டிலும் பயிற்சி பெற்று சிறந்த பாடகி, வயலினிஸ்டாக வளர்கிறேன்.
விருதுகள்
'மாணவர் தனித்திறன்' போட்டியில் மாநில அளவில் 2016 குரலிசை போட்டியில் 2, 2017 ல் நடந்த குரலிசையில் முதல் பரிசும் பெற்றேன். இது தவிர வயலின் மூலம் மெல்லிசை பாடல்கள் பாடி பதக்கங்கள் பெற்றுள்ளேன். எனது இசைப்பயணத்தில் விருதுகள் பல பெற்றிருந்தாலும், வயலின் மூலம் திரைப்பட மெல்லிசை பாடல்களை வாசித்து சமூக வலைதளத்தில் வெளியிடுகிறேன். இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பாடல்களை கேட்டு ரசிப்பதோடு, பாராட்டும் தெரிவிக்கின்றனர். இந்த உற்சாகமே என்னை மேலும் வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
இசை அமைப்பாளர் ஆசை
புகழ்பெற்ற இசை கலைஞர்களின் படைப்புகளில் இருந்து புதிய யுக்திகளை கடைபிடித்து எனது குரலிசையை வளர்த்து கொள்கிறேன். எதிர்காலத்தில் இசையமைப்பாளர் ஆவதே லட்சியம்.
இசை இல்லாவிடில் மாற்று தேர்வு
எனது முதல் ஆசையே 'சி.ஏ.,' முடித்து ஆடிட்டர் ஆவது தான். இசை மீது ஆர்வம் செலுத்தாமல் இருந்திருந்தால், விரும்பிய ஆடிட்டர் பணியை தேர்வு செய்திருப்பேன்.
இசைத்துறையில் பெண்கள் சாதிக்க ஆலோசனை
சமூக ஊடகங்கள் இல்லாத காலத்திலேயே எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே., பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோர் இசை மூலம் உலகளவில் பெயர் பெற்றனர். பெண்கள் என்ற முறையில் சிரமங்கள் வந்தாலும், அவற்றை சமாளித்து முன்னேற்ற பாதைக்கு செல்ல முயற்சித்தால் பெண்கள் இசைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கலாம்.
இளைஞர்களுக்கு சொல்ல நினைப்பது
பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கத்தை கற்பிப்பது இசை. இளைஞர்கள் வளர்ச்சி பாதைக்கு செல்ல கல்வி அவசியம். அத்துடன் இசையையும் கற்றுக்கொண்டால் எளிதில் சாதிக்கலாம்.
இவரை பாராட்ட diyamaruthanattu@gmail.com
வெங்கி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE