சென்னை : அரசியல் விவகாரத்திற்காக தன்னை வளர்த்து விட்ட தந்தையையே பகைவன் போன்று நடத்தும் சூழலுக்கு நடிகர் விஜய் தள்ளப்பட்டதை சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக டுவிட்டரில் விவாதம் நடக்கிறது. விஜய், அஜித் ரசிகர்கள் அநாகரிகமான முறையில் சண்டையிட்டு வருவதால் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுவதால் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இந்த தேர்தலில் கமல் மூன்றாவது அணி அமைக்கும் அளவுக்கு தன்னை வலுப்படுத்தி வருகிறார். ரஜினியோ உடல்நிலையை காரணம் காட்டி ஒதுங்கிவிட்டார். இந்நிலையில் நடிகர் விஜய்யை அரசியலில் களம் காண துடிக்கும் அவரது தந்தை, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ''அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்'' என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்துள்ளார். ஆனால், அந்தக் கட்சியில் தன் ரசிகர்கள் யாரும் இணையக் கூடாது, அந்தக்கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முகத்தில் அடித்தாற் போன்று சொல்லிவிட்டார் விஜய்.

இந்நிலையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “விஜய் ஒரு விஷ வளையத்தில் சிக்கி உள்ளார். அதிலிருந்து அவரை வெளியே கொண்டுவந்து காப்பாற்ற வேண்டும்,” எனக் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ஷோபா சந்திரசேகரும் மகனுக்கு ஆதரவாக சென்றுவிட்டார். இதனால் கிட்டத்தட்ட தனிமரம் போன்று உள்ளார் சந்திரசேகர்.
முன்பெல்லாம் விஜய் அவரது அப்பா சொல்லை மீறி செயல்பட மாட்டார். விஜய்யைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அவர் நியமித்த அந்த பாதுகாப்பு வளைய ஆட்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிவிட்டு, அவருக்கு ஏதுவான ஆட்களை தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டார் விஜய். அந்த புதியவர்கள் வந்த பிறகுதான் எஸ்ஏசியும் தான் வளர்த்து ஆளாக்கிய மகன் விஜய்யை சரியாகக் கூடப் பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை என்ற நிலை வந்தது என்கிறார்கள்.

அரசியல் கட்சி விவகாரத்தில் அப்பா - மகன் இடையே சண்டை இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரை படிப்படியாக வளர்த்துவிட்டது அவரது அப்பாதான். தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் வந்தாலும், அவர்கள் யாருக்கும் கிடைக்காத வெற்றி, வரவேற்பு விஜய்க்குக் கிடைத்தது. அதற்கு முழு முதல் காரணம் அவரது அப்பாதான். அப்படியிருக்கையில் இன்று அவரையே நன்றி மறந்தது போன்று விஜய் செயல்படுவதாக கூறி டுவிட்டரில் அவருக்கு எதிராக, ''#SACexposesVijayMafia, #நன்றிகெட்டவிஜய்'' என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சும்மாவே விஜய், அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடுமையாக மோதிக் கொள்வார்கள். இன்று இப்படி ஒரு விஷயம் கிடைத்ததும் சும்மா இருப்பார்களா அஜித் ரசிகர்கள் ''#SACexposesVijayMafia, #நன்றிகெட்டவிஜய்'' என்ற ஹேஷ்டாக்குகளை தேசிய அளவில் டிரெண்ட்டிங் கொண்டு வந்தனர். பதிலுக்கு விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா ''#நன்றிகெட்ட_நாய்_அஜித்'' என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி டிரெண்ட்டிங் கொண்டு வந்தனர். இதனால் சமூகவலைதளங்களில் நீயா, நானா போட்டியில் இவர்களின் சண்டை மிகவும் கீழ்த்தரமாக சென்று கொண்டு இருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE