பிள்ளைகளை வளர்ப்பது பெரிய கலை

Added : நவ 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
'உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல; உங்கள் மூலமாக இறைவனால் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் எப்படி ஆகவேண்டும் என்ற தாது அதாவது மூலப்பொருள் அவர்களுக்குள்ளே இருக்கும்'என்கிறார் அறிஞர் இக்பால். இதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். பிள்ளைகளை வளர்க்க வேண்டுமே தவிர, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வார்த்தெடுக்க நினைக்கக் கூடாது.இரண்டு வகையான வளர்ச்சி உண்டு. ஒன்று உடல்
 பிள்ளைகளை வளர்ப்பது பெரிய கலை

'உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல; உங்கள் மூலமாக இறைவனால் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் எப்படி ஆகவேண்டும் என்ற தாது அதாவது மூலப்பொருள் அவர்களுக்குள்ளே இருக்கும்'என்கிறார் அறிஞர் இக்பால். இதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். பிள்ளைகளை வளர்க்க வேண்டுமே தவிர, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வார்த்தெடுக்க நினைக்கக் கூடாது.

இரண்டு வகையான வளர்ச்சி உண்டு. ஒன்று உடல் ரீதியான வளர்ச்சி, இன்னொன்று மன ரீதியாக வளர்ச்சி. உடல் ரீதியான வளர்ச்சிக்கு சத்தான உணவுகள் போதும். உள்ள ரீதியான வளர்ச்சிக்கு சரியான உணர்வு வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்?


ஒப்பிடுதல்

உங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடாதீர்கள். இது பிள்ளைகளிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துவிடும். ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்துவம் உண்டு. முறையாகக் கற்றுக் கொடுக்காமலேயே சில திறமைகள் அவர்களிடம் பதிந்து இருக்கும். ஒரு பிள்ளை நன்றாக ஓவியம் வரையும், ஆடுதல், பாடுதல், ஓடுதல் இப்படி இயல்பான ஆற்றல் இருக்கும். இவற்றைக் கண்டுபிடித்து பயிற்சி வழங்குவதே பெற்றோரின் வேலை.

பள்ளி மற்றும் கல்லுாரிப் படிப்பு அடிப்படைத் தேவை. ஆனால் சில பிள்ளைகள் அதற்கும் மேலே சில துறைகளில் பிரகாசிப்பார்கள்.ஒரு தந்தை தன் மகனிடம் இப்படி சதா புலம்பிக் கொண்டிருப்பார். எதிர் வீட்டுப் பையனைப் பார்; உன் வயதுதானே, ஒரே பள்ளியில் ஒரே வகுப்புத்தானே படிக்கிறீர்கள். அவன் அதிக மதிப்பெண் வாங்குகிறான். உன்னால் ஏன் முடியவில்லை?

பொறுத்துப் பார்த்த மகன் ஒருநாள் பொங்கிவிட்டான். 'எல்லாம் ஒன்றுதான். ஆனால் அவனுக்கும் எனக்கும் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லாம் வேற' என்றான். அப்பாவுக்கு சுரீரென்றது. ஜீன்ஸ் அதாவது மரபணுவின் தாக்கம் மாறுபடும் என்பதை உணரவேண்டும். ரோஜா ரோஜாதான், மல்லிகை மல்லிகைதான், மல்லிகை, ரோஜா போல ஆக வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?


அடக்கி ஆள வேண்டாம்நீங்கள் அடக்கி ஆள்வதற்கு பிள்ளைகள் அடிமைகள் அல்ல. உயிர்ப்பும் உணர்ச்சியும் உள்ள ஜீவன்கள். உங்களைக் கண்டு உங்கள் பிள்ளை பயந்து நடுங்குகிறது என்றால் அது சரியான வளர்ப்பு இல்லை. பிள்ளைகளோடு மனம்விட்டுப் பேசுங்கள். தோழமை காட்டுங்கள். நேரம் கிடைத்தால் அவர்களோடு விளையாடுங்கள். ஏதாவது சந்தேகம் கேட்டால் கனிவோடு பதில் சொல்லுங்கள். அப்போது தெரியாவிட்டால் தகவலைக் சேகரித்துச் சொல்லுங்கள். எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை மிரட்டவேண்டாம்.


அங்கீகாரம் செய்யுங்கள்உங்கள் கருத்துக்களைத்தான் பிள்ளைகள் பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவர்களையும் சுயமாகச் சிந்திக்க விடுங்கள். புத்திசாலித்தனமான செயல்களைச் செய்தால் பாராட்டுங்கள். தவறுகள் இருந்தால் கனிவோடு திருத்துங்கள். தனக்கு ஒரு விஷயம் தெரிந்திருந்தாலும் தெரியாததுபோல் நடந்து, அவர்களது கருத்தைக் கவனியுங்கள். அப்பாவுக்கே நாம் சொல்கிறோம் என்ற பெருமிதம் அவர்களுக்கு வரும்.

அதனை விளக்க புராணச் செய்தி உண்டு.முருகப் பெருமானுடைய பெருமையைக் கூறும் கந்தபுராணத்தில் இந்தக் காட்சி வரும். படைப்புக் கடவுளாகிய பிரம்மனுக்கு ஓம் என்ற பிரணவத்தின் அர்த்தம் தெரியாமல் போகும். எனவே முருகப்பெருமான் பிரம்மாவை சிறையில் அடைத்துவிடுவார். இதனை அறிந்த முருகப் பெருமானின் அப்பாவாகிய சிவபிரான், முருகனிடம் உனக்கு ஓம் என்ற பிரணவத்தின் பொருள் தெரியுமா என்று கேட்பார்.

தெரியும் என்று சொன்னதும் அப்படியானால் நான் அறிய ஆசைப்படுகிறேன் சொல் பார்க்கலாம் என்பார் சிவபிரான். நான் குருவாக அமர்ந்து நீங்கள் சீடனாக இருந்து பாடம் கேட்டால் சொல்கிறேன் என்பார் முருகப்பெருமான். அதனால்தான் அப்பனுக்கே பாடம் சொன்னவர் என்று முருகப்பெருமான் போற்றப்படுகிறார். சிவன் சம்மதிக்க முருகன் விளக்கம் சொன்னார் என்பது புராணம்.

இதில் ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர். அவருக்கு ஓம் என்ற பிரணவத்தின் பொருள் தெரியுமென்றால், மூலமாக இருக்கும் சிவபிரானுக்குத் தெரியாமலா இருக்கும்? தெரியும். ஆனால் பிள்ளையின் வாயால் கேட்டு மகிழ வேண்டும் என்று விரும்புகிறார்.இதுதான் பிள்ளைகளை அங்கீகரிப்பது, அரவணைப்பது. இந்தப் பண்பை பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும்.


முன்மாதிரியாகத் திகழுங்கள்தாயும் தந்தையும் பிள்ளைகளுக்கு நேரடியான முன்மாதிரிகள். நல்ல, கெட்ட பழக்கம் உங்களிடமிருந்துதான் பிள்ளைகளுக்கு பரவும். பிறரிடம் அன்பு காட்டுவதிலும் கனிவாகப் பேசுவதிலும் உதவி செய்வதிலும் நீங்கள் காட்டும் செயல்பாடுகளே அவர்களிடம் பதியும்.

கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். அதன் மூலத்தை உணர்ந்து சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதே நல்லது. அது சண்டையாக மாறும் நிலை வந்தால் பிள்ளைகள் முன் நடத்தாதீர்கள்.பிள்ளைகள் இல்லாத நேரத்தில் நடத்துங்கள். அதுவும் விரிசல் ஏற்படும் நிலைவராமல், ஆணவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரச்னைகள் தீர்க்கும் வகையிலேயே அமையட்டும்.

பிள்ளைகளுக்கு முன் சண்டை போட்டால் அவர்களின் மதிப்பிலிருந்து நீங்கள் நழுவி விடுவீர்கள். சண்டையில் நீங்கள் பயன்படுத்தும் மோசமான வார்த்தைகளும் சில கெட்ட வார்த்தைகளும் அவர்களின் மனதில் பதிந்துவிடும். அவர்களது நண்பர்களோடு சண்டை வரும்போது அவர்களது வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வந்துவிடும். பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை. கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகிறார்கள்.


அடம்பிடிக்கும் குழந்தைகள்பிள்ளைகள் ஒரு பொருளைக்கேட்டு அடம்பிடித்தால் உடனே அடிபணிந்துவிடாதீர்கள். பிறகு அடம்பிடித்தே எல்லாவற்றையும் சாதிக்க நினைக்கும். பிள்ளைகள் கேட்கும் பொருள் இப்போதைக்கு அவசியம்தானா என்று பரிசீலனை செய்யுங்கள். தேவையென்றால் வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் அந்தப் பொருள் இப்போதைக்கு தேவையில்லை என்பதை காரண காரியங்களோடு எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள் பொருளாதார நிலைமையை பிள்ளைக்குப் புரிய வையுங்கள். எதிர்த்த வீட்டுப் பணக்கார பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு ஸ்கூட்டரில் போகிறார்கள் என்றால் அது நம்மால் இயலுமா? நமது தகுதிக்கு சைக்கிளே போதும் என்பதை உணர்த்துங்கள். அதே நேரத்தில் அவர்கள் விரும்பிய தேவையான ஒரு பொருளை வாங்கித் தருவதாக வாக்களித்துவிட்டால் கண்டிப்பாக வாங்கிக்கொடுங்கள்.


வாழ்க்கைப்பாடம்

கல்விக்கூடக் கல்வியோடு வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக் கொடுங்கள். கல்விக்கூடங்களில் அவர்களுக்குக் கிடைக்காதது அதுதான். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பயமின்மை, தோல்வியைக் கண்டு துவளாத மனப்பக்குவம் இவைகளை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தால் திட்டாதீர்கள். இன்னும் முயன்று பார் என்று உற்சாகப்படுத்துங்கள்.

தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைந்துள்ள வரலாற்றை எடுத்து கூறுங்கள். அதற்கான புத்தகங்களை படிக்கச் செய்யுங்கள். ஒரு வாய்ப்புக்கு முயன்று அது கிடைக்காமல் போனால் இன்னும் பல துறைகள் உண்டு என்பதை உணர்த்துங்கள். ஒரு வாய்ப்பை விட்டால் வாழ்க்கை ஸ்தம்பித்துவிடுமோ என்ற பயம்தான் அவர்களைத் தற்கொலைக்குத் துாண்டுகிறது. உலகம் விரிந்தது. எத்தனையோ வாய்ப்புகள் உண்டு.

நமது பாரத நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், அந்தப் பதவிக்கு வருவதற்கு முன்னால் டில்லியில் ஒரு விஞ்ஞான கழகத்தில் வேலைக்குச் சேர நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார். ஆனால் அதில் தோல்வியடைந்தார். விரக்தியோடு இமயமலைப் பகுதியில் ரிஷிகேஷ் என்ற இடத்துக்குப் போனார். அங்கு சுவாமி சிவானந்தரைச் சந்தித்து தனது தோல்வி பற்றிச் சொன்னார். 'கவலைப்படாதீர்கள். இதைவிட சிறப்பான வாய்ப்பு உங்களுக்குக் காத்திருக்கிறது' என்று சுவாமிஜி ஆறுதல் சொன்னார்.அது தானே நடந்தது.

பிள்ளைகள் வளர்ந்து வேலைவாய்ப்புகளைத் தேடும்போது இது இல்லாவிட்டால் இன்னொன்று என்ற மனப்பாங்கை வளர்க்க வேண்டும். அப்போதுதான் தவறான முடிவுகளை எடுக்காமல் அடுத்த வாய்ப்புக்கு முயல்வார்கள். வெற்றி என்பது பெற்றுக் கொள்வது. தோல்வி என்பது கற்றுக் கொள்வது. இதை பிள்ளைகளுக்கு பெற்றோர் உணர்த்த வேண்டும்.

முனைவர் இளசை சுந்தரம்

வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் மதுரை.

98430 62817

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Singaravelu - Chennai,இந்தியா
09-நவ-202013:29:03 IST Report Abuse
S Singaravelu தேங்க்ஸ் சார்
Rate this:
Cancel
Pandiyan - Doha,கத்தார்
09-நவ-202012:07:18 IST Report Abuse
Pandiyan மிகவும் சிறப்பான தகவல் நன்றி ஐயா முனைவர் இளசை சுந்தரம்....
Rate this:
Cancel
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
09-நவ-202010:49:26 IST Report Abuse
Selvam Palanisamy மிகவும் அருமை. நன்றி,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X