மாஜி மேயர் வீட்டுக்கு சி.எம்., விசிட் கூடப்போனவங்க மனசெல்லம் திடுக்| Dinamalar

'மாஜி' மேயர் வீட்டுக்கு சி.எம்., 'விசிட்' கூடப்போனவங்க மனசெல்லம் 'திடுக்'

Updated : நவ 10, 2020 | Added : நவ 10, 2020 | |
சித்ராவும், மித்ராவும் கடைத்தெருவுக்கு சென்றிருந்தனர். ராஜ வீதியில், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, நகைக்கடைக்குள் நுழைந்த சித்ரா, ''மித்து, அந்த, சார் பதிவாளர் அலுவலகத்தில்தான், லஞ்ச ஒழிப்பு துறை 'ரெய்டு' நடந்துச்சாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''ஆமாக்கா, மாநிலம் முழுவதும் வெவ்வேறு அலுவலகங்களில் சோதனை செஞ்சிருக்காங்க. நம்மூர்ல, பத்திரப்பதிவு
chitra, mitra

சித்ராவும், மித்ராவும் கடைத்தெருவுக்கு சென்றிருந்தனர். ராஜ வீதியில், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, நகைக்கடைக்குள் நுழைந்த சித்ரா, ''மித்து, அந்த, சார் பதிவாளர் அலுவலகத்தில்தான், லஞ்ச ஒழிப்பு துறை 'ரெய்டு' நடந்துச்சாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமாக்கா, மாநிலம் முழுவதும் வெவ்வேறு அலுவலகங்களில் சோதனை செஞ்சிருக்காங்க. நம்மூர்ல, பத்திரப்பதிவு ஆபீசுக்குள்ள நுழைஞ்சாங்க. இதுல, கொடுமை என்னான்னா, விசாரணை நடந்துக்கிட்டு இருந்தபோதே, முத்திரைத்தாள் எழுத்தர் ஒருத்தர், ரூ.1.16 லட்சத்தை லஞ்சமா கொடுத்திருக்காரு. அதை பார்த்து, லஞ்ச ஒழிப்பு துறையினரே, 'ஷாக்' ஆகிட்டாங்களாம்,''

''அப்புறம், என்னாச்சுக்கா,'' என, ஆர்வமிகுதியில், துளைத்தெடுத்தாள் மித்ரா.''பொறுமையா கேளு! பண்டிகை முடியற வரைக்கும், லஞ்ச ஒழிப்பு துறை வேட்டை ஓயாதுன்னு நினைச்சு, பதிவுத்துறையை சேர்ந்த சில சார்பதிவாளர்களும், ஊழியர்களும், 'மெடிக்கல் லீவு' போட்டுட்டு, ஓட்டம் பிடிச்சிட்டாங்களாம்,''

''அரசு அலுவலகங்கள், வட்டார போக்குரவரத்து அலுவலகங்களில், பணிபுரியும் அதிகாரிகள் சிலர், இப்போதைக்கு ஆபீசுக்கு வர வேண்டாம்னு சொல்லியிருக்காங்களாம். குறிப்பிட்ட இடத்தைச் சொல்றாங்களாம். அந்த இடத்துக்கு வேறொரு நபரை அனுப்பி, லஞ்ச பணத்தை வாங்கிக்கிறாங்களாம்,''

''கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் சிலர், அருகாமையில் உள்ள லாட்ஜ், ஓட்டல்களுக்கு வரவழைக்குறாங்க,'' என்ற சித்ரா, ''நம்மூருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., வந்துட்டு போயிருக்காரு; ரெண்டு நாள் தங்கியிருந்தாரே; ஏதாச்சும் விசேஷமான தகவல் இருக்கா,''

''முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி, இல்லத்திருமண விழா, சமீபத்தில் நடந்துச்சு; முதல்வர் வருவாருன்னு ரொம்பவும் நம்பிக்கையா இருந்திருக்கார்; வராததால, மன வருத்தத்தில் இருந்தாராம். இதை கேள்விப்பட்ட முதல்வர், விமான நிலையம் வந்திறங்கியதும், செ.ம.வேலுசாமி வீட்டுக்குதான் போனாரு,''

''மணமக்களை வாழ்த்தியதோடு, ஒரு மணி நேரம் தங்கியிருந்து, கட்சி நிர்வாகிகளுடன் மனம் திறந்து பேசியிருக்காரு. கொங்கு மண்டலம் நமது கோட்டைங்கிறதை, மறுபடியும் நிரூபிக்கணும்னு சொல்லியிருக்காரு. அதன் பிறகே, மேட்டுப்பாளையம் புறப்பட்டு போயிருக்காரு,''''மறுநாள், ஊட்டி, திருப்பூர் விழாக்களை முடிச்சிட்டு சர்க்கியூட் ஹவுஸ் வந்து சேருவதற்கு, ராத்திரி 10:45 மணியாகிடுச்சு,''''எம்.எல்.ஏ.,க்கள் - கட்சி நிர்வாகிகள் உறவினர்கள் பலரும் முதல்வர் கூட, குரூப் போட்டோ எடுத்துக்கிட்டாங்க. உறங்கப் போறதுக்கு, ராத்திரி 12:00 மணியை தாண்டிடுச்சாம்,'' என்ற மித்ரா, நகைக்கடை ஊழியரிடம், வளையல் ரகங்களை காட்டச் சொன்னாள்.

''செ.ம.,வீட்டு விசிட்டுக்கு பின்னால, ஏகப்பட்ட பாலிட்டிக்ஸ் ஒளிஞ்சிருக்குன்னு கேள்விப்பட்டேனே...,''''நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டேன்...எலெக் ஷன் வருதுல்ல...போக போக தெரியும்,'' என்று கூறி கண்ணடித்தாள்.இருவருக்கும் காபி கொடுத்து உபசரித்தார், கடை உதவியாளர்.காபியை உறிஞ்சிய சித்ரா, ''மலையை ஒட்டிய இடங்களை, ஆளுங்கட்சிக்காரங்க வளைச்சு போட ஆரம்பிச்சிட்டாங்களாமே,'' என, கிளறினாள்.

''ஆமாக்கா, உண்மைதான்! மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள, விளை நிலங்களை வாங்கியிருக்காங்க; மிளகு, ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய் போன்ற பயிர்களை பயிரிட்டு, ஏற்றுமதி செய்றாங்களாம். இதில், ஆளுங்கட்சி பிரமுகரும் பங்குதாரராம். விஷயமறிந்த அரசியல் பிரமுகர்கள் சிலர், மலையை ஒட்டி நிலம் வாங்க முயற்சி செய்றாங்களாம்,''

''சூலுார் ஏரியாவுல பங்கு பிரிச்சதா கேள்விப்பட்டேனே,'' என, கேட்டாள் சித்ரா.''அதுவா, சூலுார் ஏரியாவுல இருக்குற, மதுபான பார்களில் கலெக்சன் செய்றது சம்பந்தமா பேசுறதுக்கு ரகசியமா கூட்டம் நடத்தியிருக்காங்க; ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்துக்கிட்டாங்களாம்,''

''சூலுார் ஒன்றியத்தில் சேல்ஸ் சக்கைப்போடு போடுற ஏரியா; குறைவா இருக்குற ஏரியான்னு, தனித்தனியா பிரிச்சிருக்காங்க. ஒருத்தர் ஏரியாவுல, இன்னொருத்தர் தலையிடக் கூடாது; போலீசாரை கவனிக்கணும்னு, 'டீலிங்'கை கச்சிதமா முடிச்சிருக்காங்க. இதுல கிடைக்குற வருமானத்தை, கட்சி நிகழ்ச்சிகளுக்கு வஞ்சகம் இல்லாமல், செலவு செய்யணும்னு உத்தரவாம்,''

''ஒவ்வொரு தரப்பும் கரன்சி அள்ளுறதுல மட்டும் குறியா இருந்தா, மதுக்கடையை மூடுறதா சொல்றதெல்லாம், வாய்ச்சவடால் தானா,'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.''அக்கா, கரன்சி மழை பொழியுற இடத்தை, அவ்ளோ சீக்கிரமா அழிச்சிடுவாங்களா, என்ன,'' என்ற மித்ரா, ஒரு வளையல் செட் தேர்வு செய்து, பில்லுக்கு அனுப்பினாள்.ஆரம் தேர்வு செய்யும் இடத்துக்குச் சென்ற சித்ரா, ''கொஞ்ச நாளா, போலீஸ் மேட்டர் எதுவுமே சொல்லலையே,'' என, வம்புக்கு இழுத்தாள்.''

அக்கா, சிட்டி லிமிட்டுக்குள்ள, சில இன்ஸ்., சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் வந்திருக்கு. ஆளுங்கட்சிக்காரங்க பின்னால ஒழிஞ்சிருக்கிறதுனால, 'மெமோ' கூட கொடுக்க முடியாமல், உயரதிகாரிகள் தவிக்கிறாங்களாம்,''''மித்து, இப்ப, அரசியல்வாதிகள் தலையீடு, எல்லா துறையிலும் அதிகமாயிடுச்சு; எந்த அதிகாரியாலும், துணிச்சலா நடவடிக்கை எடுக்க முடியறதில்லை. தப்பு செஞ்சதை ஆதாரப்பூர்வமா நிரூபிச்சா கூட, துறை ரீதியான நடவடிக்கைக்கு கூட, ஆளுங்கட்சி வி.ஐ.பி., அனுமதி வாங்க வேண்டியிருக்குதாம்,''''அக்கா, பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க. சிலர் மீது நடவடிக்கையும் எடுத்திருக்கறதா, தகவல் சொல்றாங்களே,''

''அப்படீனா, அவங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருந்திருக்காதுக்கா,''''அதைப்பத்தி தெரியலை. வெரைட்டி ஹால் ரோடு ஸ்டேஷன் லிமிட்டுல, ஏகப்பட்ட குடோன்களில் புகையிலை பொருட்களை பதுக்கி வச்சு, வித்துருக்காங்க. அந்த வழக்குல கைதாகி, ஜாமினில் வெளியே வர்றவங்க வீட்டுக்கே, எஸ்.எஸ்.ஐ., ஒருத்தரு போயி, வசூலில் ஈடுபட்டிருக்காரு. இது சம்பந்தமா புகார் வந்ததும், அவரை துாக்கிட்டாங்களாம்,''''அப்படியா,'' என கேட்ட சித்ரா, ''நில அளவை துறையிலும் லஞ்சம் கொடுக்காமல், எந்த வேலையும் நடக்காதாமே,'' என, சப்ஜெக்ட் மாறினாள்.''

ஆமாக்கா, அன்னுார் தாலுகா ஆபீசுல இருக்குற நில அளவை பிரிவுல, பட்டா, நில அளவீடு செய்றதுக்கு விண்ணப்பிச்சா, கரன்சி கொடுக்காமல், வேலை ஆகாதாம். கூட்டுப்பட்டாவை தனித்தனியா பிரிக்கணும்னா, அஞ்சாயிரத்துல இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கேட்குறாங்களாம்,'' என்றபடி, பில்லுக்குரிய தொகையை கொடுத்தாள் மித்ரா.நகைகளை வாங்கிக்கொண்டு, இருவரும் கடையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, அரசு துறை ஜீப் கடந்து சென்றது.அதைப்பார்த்த சித்ரா, ''என்னப்பா, தலைமை செயலர் சண்முகம் எதுக்கு வந்தாரு,'' என, கிளறினாள்.

''அக்கா, கோயமுத்துார் நிலவரத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேரடியா கண்காணிச்சிட்டு வர்றாராம். கண்காணிப்பு அலுவலர் முருகானந்தம், கடந்த வாரம் வந்தாரு; அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திட்டு, முக்கியமான இடங்களுக்கு கள ஆய்வு போனாரு,''''முதல்வர், கோவைக்கு வந்துட்டு போனதுக்கு அப்புறம், கொரோனா பரவல் உண்மை நிலைமை அறிய, தலைமை செயலர் வந்திருக்காரு. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஐ.ஏ.எஸ்.,அந்தஸ்துல அதிகாரி நியமிக்க முடிவு செஞ்சிருந்தாங்க. கடைசி நேரத்துல, அந்த பிளானை கை விட்டுட்டாங்க,''

''இப்போ, தொற்று பரவல் குறைஞ்சிடுச்சுன்னு, 'அசால்ட்'டா இருக்கக் கூடாதுன்னு, 'அட்வைஸ்' செஞ்சிருக்காரு. கூட்டம் கூட்டமா மக்கள் சுத்தறதுனால, பண்டிகை முடிஞ்சதும், ஒரு வாரத்துக்குள்ள, பாதிப்பு தெரிய வரும். விழிப்பா செயல்படணும்னு சொல்லியிருக்காரு,'' ''அப்படியா,'' என்றபடி, ஸ்கூட்டரை, 'ஸ்டார்ட்' செய்தாள் சித்ரா.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X