பிரபல, 'டிவி'யின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மஹாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டது, அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது. அமித் ஷா உட்பட பல மத்திய அமைச்சர்கள், இந்த கைதை கண்டித்துள்ளனர். மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா ஆகியோரை, தன் விவாதங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார், அர்னாப். காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் விமர்சித்தார். இந்த விவகாரம், காங்., மூத்த தலைவர்களிடையே விரிசலை உருவாக்கிவிட்டது. 'எதற்கு வழக்கு மேல் வழக்கு போட வேண்டும்... இதனால், நிலைமை மோசமாகும். தேவையில்லாத வேலை' என, காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் முணு முணுக்கின்றனர். மற்றொரு பக்கம், இந்த விவகாரத்தில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் தான் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது கட்சியை சேர்ந்தவர் தான், மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சராக உள்ளார். அவரது உத்தரவின்படி தான், அர்னாப் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரேக்கு, கெட்ட பெயரை ஏற்படுத்த நடத்தப்படும் உள்குத்து என்றும் சொல்லப்படுகிறது.காங்கிரஸ் மற்றும் சரத் பவாரை எதிர்த்து அரசியல் செய்த சிவசேனா, தற்போது, இவர்களுடனே கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது.அர்னாப் கோஸ்வாமி கைது, கூட்டணியில் பல பிரச்னைகளை உருவாக்கி விட்டது என்பது தான் உண்மை.
இவரா இப்படி?
அந்த பிரபல கட்சியின் தமிழக தலைவரைப் பற்றி, கட்சிக்குள்ளாகவே பலவாறு பேசுகின்றனர். இந்த விவகாரம் டில்லி வரை செல்லும் என கூறப்படுகிறது. அந்த தலைவரின் மனைவி, நல்ல பதவியில் உள்ளார். அவரது பெயரை வைத்து, தமிழக வீட்டுவசதி வாரியத்தின் வாயிலாக, ஒரு வீடு வாங்க முயற்சித்து வருகிறார்.இதற்காக தமிழக அரசின் அமைச்சர்களையும், அவர் சந்தித்துள்ளாராம். 'எப்படியும் வீடு கிடைத்துவிடும்' என, ஆளும் கட்சியினர் சொல்கின்றனர். ஏற்கனவே இந்த தலைவரின் அதிரடி நடவடிக்கைகள் கட்சியின் சீனியர்களுக்கு பிடிக்கவில்லை. 'எதற்கு ஆளும் கட்சியிடம் போய் கெஞ்சுகிறார்; இந்த நடவடிக்கை சரியில்லை' என்கின்றனர், சீனியர்கள். ஆனால், கட்சி மேலிடத்தின் ஆதரவு இந்த தலைவருக்கு இருப்பதால், அவருக்கு நெருக்கடி எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
தலைவர்களின் உணவு பழக்கங்கள்
அரசியல் தலைவர்களுக்கு சாப்பாட்டு விஷயங்களில், சில வினோதமான பழக்கங்கள் இருக்கும். ஜிலேபி மீது, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அதீத ஆசை. மாலை வேளைகளில், டீ அருந்தும் போது, ஜிலேபி அவசியம் இருந்தாக வேண்டும்.தேர்தல் பிரசாரம் அல்லது எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் சந்திப்பு என, எங்கு சென்றாலும், இந்த ஜிலேபி பழக்கத்தை, ராஜ்நாத் சிங் விடாமல் தொடர்ந்து வருகிறார். கடந்த, 30 ஆண்டுகளாக, ஜிலேபியுடன் உறவு தொடர்கிறது என்கின்றனர், ராஜ்நாத்திற்கு நெருக்கமானவர்கள். வெளியூர் செல்லும் போது, இவரது சமையல்காரர், ஒரு டிபன் பாக்சில் ஜிலேபியைக் கொடுத்து அனுப்புவாராம். இதே போல், டில்லிக்கு வரும் தமிழக அரசின் முக்கிய பிரமுகருக்கு, டில்லியின் சோலே பட்டூரா மீது, அப்படி ஒரு ஆசை.டில்லி சாந்தினி சவுக் பகுதியில், ஒரு பிரபல கடையில் தயாராகும் சோலே பட்டூரா- அதாவது நம்ம ஊர் சோளா பூரி- மிகவும் பிரபலம்.டில்லி வரும் போதெல்லாம், இங்கிருந்து தமிழ்நாடு இல்லத்திற்கு இந்த பூரி வந்துவிடும். சமீபத்தில் டில்லி வந்த போதும், சோளா பூரியை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தாராம், அந்த பிரமுகர்.
தேர்தல் ஆலோசனை
தமிழக தேர்தல் பிரசாரத்தில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக, தீபாவளி முடிந்த பின், டில்லியில், பா.ஜ., மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் தமிழக, பா.ஜ., தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். கட்சி தலைவர் நட்டா, தலைமை வகிப்பார்.இந்த கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சில சீனியர் அமைச்சர்களும் இதில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.தற்போதுள்ள அரசியல் சூழல், பிரசார வியூகம், இளம் வாக்காளர்களை கவர்வது ஆகியவை குறித்து, பிரதமர் மோடியும், அமித் ஷாவும், ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.க., உடனான கூட்டணி குறித்தும், இதில் ஆலோசனை நடத்தப்படஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE