வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடனின் கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் டாக்டர், செலின் ராணி கவுண்டர் இடம்பெற்றுள்ளார். தனது பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயரை சேர்த்ததற்கான காரணத்தை செலின் கவுண்டர் தற்போது கூறியுள்ளார்.
அமெரிக்காவின், புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், தன் பதவியேற்புக்கு முன்னதாக, கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். இதில், மூவர் தலைமையில், 13 பேர் இடம் பெற்றுள்ளனர். துணைத்தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தியும், குழு உறுப்பினராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் டாக்டர், செலின் ராணி கவுண்டர், 43, என்பவரும் இடம் பெற்றுள்ளனர்.
செலின் ராணி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேரூராட்சி, பெருமாபாளையத்தைச் சேர்ந்தவர். இவர், நியூயார்க் பல்கலையில் உள்ள, கிராஸ்மேன் மருத்துவக் கல்லுாரியில் உதவி பேராசிரியராகவும், அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவில், துணை இயக்குனராகவும் பணிபுரிகிறார்.

இந்நிலையில், செலின் தனது பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயரை சேர்த்துள்ளது குறித்து தமிழர்கள் பலர் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் பதிவிட்டதாவது: எனது அப்பா 1960களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். நடராஜன் என அமெரிக்கர்கள் அழைக்க சிரமப்பட்டபோது, கவுண்டர் என்பது அவர்களுக்கு உச்சரிக்க எளிதாக இருந்தது. நான் பிறப்பதற்கு முன்பு 1970களின் முன்பே எனது தந்தை, தனது பெயரை கவுண்டர் என்று மாற்றினார்.

அதில் சில வேதனைகள் இருந்தாலும், அது எனது வரலாறு மற்றும் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். நான் திருமணம் செய்துகொண்டபோது எனது பெயரை மாற்றவில்லை. நான் இப்போது அதை மாற்றப்போவதில்லை. அது என் அடையாளம், வரலாறு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிலை ஆதரித்தும், எதிர்த்தும் பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE