புதுடில்லி: 'ரிபப்ளிக் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தின், அலிபாக் பகுதியை சேர்ந்த அன்வய் நாயக் என்பவர், 2018ல், தன் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, 'ரிபப்ளிக் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரை, போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமின் கோரி, அர்னாப் உள்ளிட்ட மூவரும், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அலிபாக் செஷன்ஸ் நீதிமன்றத்தில், அர்னாப் உள்ளிட்ட மூவரும், ஜாமின் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றத்திலும், அவர்கள் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று (நவ.,11) விசாரணைக்கு வந்தது. அவசர வழக்காக விசாரித்த நீதிபதி சந்திரசூட், 'அர்னாப்பிற்கு ஜாமின் வழங்க மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு அவரின் கொள்கை பிடிக்காமல் இருக்கலாம். நானே அவரின் சேனலை பார்க்க மாட்டேன். ஆனால் அதற்காக நீதியை நிலைநாட்டாமல் இருக்க முடியாது. மாநில அரசுகள் சட்டத்திற்கு எதிராக இவ்வாறு செயல்பட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அதை தடுக்கும். மாநில உயர்நீதிமன்றமும் இதில் உறுதியாக செயல்படவேண்டும். அனைத்திற்கும் அரசு, கைது நடவடிக்கையை கையில் எடுத்துக் கொண்டு இருக்க கூடாது. தேர்தல் முடிவுகளில் இந்த சேனல்கள் எல்லாம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அப்படியிருக்கும் போது கைது ஏன்?.

எல்லாவற்றுக்கும் கைது செய்ய கூடாது. உங்களுக்கு ஒரு சேனல் பிடிக்கவில்லை என்றால் அதை பார்க்க வேண்டாம். அதை விட்டுவிட்டு தொகுப்பாளர் மீது நடவடிக்கை ஏன்? இதில் மனுதாரரின் உரிமையை மறுக்க கூடாது. இந்த வழக்கில் இன்னும் முழுமையாக எப்.ஐ.ஆர் பதியப்படவில்லை. அதற்குள் அவசரம் ஏன்? நீதிமன்றம் இதில் இப்போது உறுதியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அரசின் நடவடிக்கையில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்,' எனக்கூறிய நீதிபதி சந்திரசூட், மூவருக்கும் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ரூ.50 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.