தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்: மத்திய அமைச்சரவையில் பங்கெடுத்த, தி.மு.க., எய்ம்ஸ் மருத்துவமனைக்காக குரல் கொடுத்ததுண்டா... முல்லை பெரியாறு பிரச்னையில், தி.மு.க., பறிகொடுத்த உரிமையை, ஜெயலலிதா பெற்று தந்த, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி காட்டினார். தி.மு.க., ஆட்சியில், ஸ்டாலினால் மதுரைக்கு வர முடிந்ததா. 2 ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்தனரே; ஒருவருக்காவது தந்தனரா?
'டவுட்' தனபாலு: நீங்கள் எத்தனை கேள்விகள் கேட்டாலும், அந்த கேள்விகளில் உண்மை இருந்தாலும், தி.மு.க.,வின் தற்போதைய தலைமை, அதை பொருட்படுத்தாது; அடுத்த கண்டன அறிக்கை தயாரிப்பில் மும்முரமாக இருக்கும். அவர்கள் பழி சொல்வதும், அதற்கு நீங்கள் பதில் சொல்வதும், அரசியல் தான் என்பதில், மக்களுக்கும், 'டவுட்' வருவதில்லை!
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: கடவுளுக்கு நிகராக பணி செய்யும், நம் மருத்துவர்களின் சேவையை, கொச்சைப்படுத்தும் விதமாக, ஸ்டாலின் அறிக்கை அமைந்துள்ளது. அரசியல் செய்ய, எத்தனையோ காரணங்கள் இருந்தபோதிலும், அமைச்சரின் இறப்பிலும், அரசியல் லாபம் தேடும், எதிர்க்கட்சி தலைவரை, தமிழகம் பெற்றுள்ளது, நமக்கெல்லாம் துரதிருஷ்டம்.
'டவுட்' தனபாலு: எப்படியாவது, தமிழக மக்கள் மத்தியில், இ.பி.எஸ்., அரசை, தோல்வி அடைந்த, ஏமாற்றும், மோசடித்தனமான, ஊழல் கறைபடிந்ததாக காட்ட வேண்டும் என, ஸ்டாலின் முயற்சிக்கிறார். ஆனால், தமிழக மக்கள், இவரின் பேச்சை நம்புவதில்லை என்பதை அவர் அறிவதில்லையோ என்பது தான், 'டவுட்' ஆக உள்ளது.
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழ்க்கடவுள் முருகனை இதயத்தில் இருத்தி, தருமத்தை காக்கும் வேலாயுதத்தை, ஹிந்துக்கள் வழிபடுகின்றனர். அது தருமத்தை நிலைநாட்டும் ஆயுதம். அது, காங்கிரசை காக்காது. தவறு செய்பவர்களை காக்காது. தமிழர் மரபில் வேல் வழிபாடு என்ற வழிபாடும் உண்டு என்பதை காங்கிரஸ் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
'டவுட்' தனபாலு: வெளிநாட்டுக்காரர்கள் துவக்கிய காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தில் தலைவராக இருப்பவர், பச்சைத்தமிழர் அழகிரி தானே; வேலின் பெருமையை அவர் அறிந்திருக்கத் தானே செய்வார். எனினும், வேல் யாத்திரைக்கு கிடைத்து வரும் விளம்பரத்தைப் பார்த்து, மனம் கலங்கி, 'வேல் ஒரு ஆயுதம்' என கூறியிருப்பாரோ என்ற, 'டவுட்' வருகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE