
தெய்வப் புலவர் என்று போற்றப்படும் சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவனடியார் . இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன் மந்திரியாகவும் இருந்தவர். மன்னனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றினார்.
பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று இவருக்கு அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றார்.

ஒராண்டாக இவர் இயற்றிய பெரிய புராணம் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
சேக்கிழாருக்கு அவர் பிறந்த குன்றத்துாரில் உள்ள சிவன் கோயிலில் தனி சன்னதி உள்ளது.சேக்கிழார் மீது பற்றும் அதீத பக்தியும் கொண்ட பார்த்திபன் என்பவர் சேக்கிழாருக்கு ஒரு மரச்சிற்பம் உருவாக்க முனைந்தார்.இதற்காக போரூர் குன்றத்துார் ரோட்டில் உள்ள மரச்சிற்பி அப்பர் லட்சுமணனை அணுகினார்.
பொதுவாக கல் மற்றும் உலோகங்களில்தான் தெய்வச் சிற்பங்கள் செய்வர் மிக அபூர்வமாக அத்தி வரதர் போன்ற மரத்தாலான தெய்வச் சிற்பங்களும் உண்டு.மரச்சிற்பம் செய்வதில் கைதேர்ந்த அப்பர் லட்சுமணன் இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சேக்கிழார் உருவத்தை மரத்தால் உருவாக்கியுள்ளார்.
இரண்டு அடி உயர அத்தி மரத்தை எடுத்துக் கொண்டு நான்கு வார உழைப்பில் உருவாக்கிய சேக்கிழார் மரச்சிற்பம் தற்போது தத்ரூபமாக வந்துள்ளதாகவும் இதனை ஒரு நல்ல நாளில் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் விவரமறிய அவரது எண்:94447 16405.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE