சென்னை: கொரோனா வைரசை விட இந்த குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட்டுகின்றன என பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு ஒத்திவைத்ததை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஏழு மாதங்களுக்கு பிறகு 9,10,11,12-ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் தமிழக அரசு அறிவித்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பெற்றோரின் கருத்துக்களை கேட்ட பின், பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 9ம் தேதி நடந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக இன்று (நவ.,12) தமிழக அரசு அறிவித்துள்ளது. சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டதாவது: பள்ளிகள் திறப்பு - ஒத்திவைப்பு குழப்பங்கள் அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது. முன்யோசனைகள் இன்றி அறிவித்து பின்வாங்குவது முதல்வர் பழனிசாமி அரசின் வழக்கமாகிவிட்டது. கொரோனா வைரசை விட இந்த குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட்டுகின்றன. மக்களை மேலும் மேலும் குழப்பாதீர்கள்!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE