புதுடில்லி:''இந்தியாவுக்கான, 'எஸ் -- 400' ரக அதிநவீன ஏவுகணைகளை, ஒப்பந்த காலத்திற்கு முன்பாகவே ஒப்படைக்க, ரஷ்யா கடுமையாக முயற்சித்து வருகிறது,'' என, இந்தியாவுக்கான ரஷ்ய துணை துாதர், ரோமன் பாபுஷ்கின் தெரிவித்தார்.
தரையில் இருந்து விண்ணில் பாய்ந்து தாக்க கூடிய, அதிநவீன, 'எஸ் -- 400' ரக ஏவுகணைகளை, ரஷ்யாவிடம் இருந்து வாங்க, 38 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 2018ல், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.
இதன்படி, முதல் கட்ட ஏவுகணைகள், அடுத்த ஆண்டு இறுதியில், டில்லி வந்தடைய வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலைகளை மனதில் வைத்து, 'எஸ் -- 400' ஏவுகணைகளை, விரைவில் ஒப்படைக்க, மத்திய அரசு தரப்பில் இருந்து, ரஷ்யாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தேசிய நலன்
இது குறித்து, இந்தியாவுக்கான ரஷ்ய துணை துாதர், ரோமன் பாபுஷ்கின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை கவனித்து வருகிறோம்; அவை, ரஷ்யாவின் நலனில் இழப்பை ஏற்படுத்தாத வரை, எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.இந்தியா -- ரஷ்யா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை பொருத்தவரை, இரு நாடுகளின் தேசிய நலனை பிரதிபலிக்கிறது. எனவே, அவை கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு குறுக்கீடுகளை எதிர்க்கும் திறன் உடையது.
மேலும் எங்கள் உறவின் எதிர்கால முன்னேற்றம் குறித்து, மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.'எஸ் -- 400' ஏவுகணையை பொறுத்தவரை, ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு இறுதியில் முதல்கட்ட சப்ளை அளிக்க வேண்டும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவற்றை இன்னும் விரைவாக செய்ய கடுமையான முயற்சிகளை செய்து வருகிறோம்.
சுய லாபம்
மேலும், இந்திய ராணுவத்திற்காக, 200, 'கமோவ்கா -- 226டி தாக்கும் திறன் உடைய ஹெலிகாப்டர்களை, இந்தியா -- ரஷ்யா கூட்டாக தயாரிக்கும், பல ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம், விரைவில் கையெழுத்தாகும்.அதோடு, இந்தியா -- ரஷ்யா கூட்டாக தயாரிக்கும், 'பிரமோஸ் சூப்பர்சானிக்' ஏவுகணைகளை, தென்கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்ஸ் உட்பட, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, இருநாடுகளும் திட்டமிட்டுஉள்ளன.
சர்வதேச அளவில், கொந்தளிப்பான நிலை மற்றும் கணிக்க முடியாத தன்மை தற்போது நிலவி வருகிறது. இந்த நேரத்தில், இந்தியா -- சீனா இடையிலான பதற்றம், யூரேசிய பிராந்தியத்தின் ஸ்திர மற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும்.இதை, மற்ற நாடுகள், தங்களின் சுய லாபத்துக்காக பயன்படுத்த வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE