மாணவியான நான் பரோட்டா போடுகிறேன்!
கல்லுாரியில் படித்தபடியே, தாய் நடத்தி வரும் ஓட்டலில், பரோட்டா மாஸ்டராக பணியாற்றுவது பற்றி, 20 வயது மெரிண்டா: சொந்த ஊர், கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள
கும்பளங்காடு.
என்னுடன் பிறந்தது, இரண்டு அக்கா. 15 ஆண்டுகளுக்கு முன், எங்களையும், அம்மாவையும் அம்போன்னு விட்டுட்டு, அப்பா எங்கோ போய் விட்டார்; ஏராளமான கடன்களையும் எங்கள் மீது அவர் சுமத்தியிருந்தார்.அந்த கடன்களை அடைக்க, அம்மா ரொம்ப கஷ்டப்பட்டார். வீடுகளில் வேலை, ஓட்டல்களில் வேலை என, கையில் கிடைத்த அனைத்து வேலைகளையும் பார்த்தார். அப்போது தான், சிறிய அளவில் ஓட்டல் துவங்கும் எண்ணம் அவருக்கு வந்தது.
எங்கள் ஓட்டல், காலை, 6:00 மணிக்கு துவங்கி, இரவு, 8:00 மணி வரை நடக்கும். சாதம், பரோட்டா, கப்பங்கிழங்கு, மட்டன், சிக்கன், பீப் கிடைக்கும்.
எங்கள் கடையில், பிற வேலைகளை அம்மா செய்து விடுவார். ஆனால், பரோட்டா மாஸ்டராக இருந்த நபருக்கு, தினமும், 800 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும். அதை கொடுக்க, மிகவும்
சிரமமாக இருக்கும். ஏனெனில், அந்த அளவுக்கு வியாபாரம் பெரிய அளவில் இருக்காது.அப்போது, நான் கல்லுாரியில் சேர்ந்த புதிது. பரோட்டா மாஸ்டரை வர வேண்டாம் என சொல்லி விட்டு, பரோட்டா போடத் துவங்கி விட்டேன். அது ஒன்றும் எளிதான பணியாக முதலில் இருக்கவில்லை. 15 கிலோ மைதா மாவை பிசைந்து, துண்டுகளாக உருட்டி, 240 பரோட்டாக்கள் போட வேண்டும். மைதா மாவை பிசையும் போதே கை வலி கொன்று விடும். அதன் பின், அதை வீசி, பரோட்டாவாக சுட்டு எடுத்த பின், சூடாக இருக்கும் போதே அடித்து, துவைத்து போட வேண்டும்.
முதலில் சில நாட்களுக்கு இந்த பணி, மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. அதன் பின் பழகி விட்டது. இப்போது தினமும், காலை, 5:00 மணிக்கு எழுந்து, ஓட்டலுக்கு தேவையான வேலைகளை பார்த்து, பரோட்டாவுக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு, பஸ்சை பிடித்து, கல்லுாரிக்கு சென்று படித்து விட்டு, மதியம் வந்ததும், நேராக ஓட்டலுக்கு வந்து, பரோட்டா போடத் துவங்கி விடுவேன்.
நான், பரோட்டா மாஸ்டர் என்பது, முதலில் சில நாட்களுக்கு கல்லுாரியில் தெரியாமல் இருந்தது. இப்போது, அனைவருக்கும் நன்கு தெரிந்து விட்டது. இரவு, 10:00 மணி வரை, கடை வேலை இருக்கும். அதன் பின், வீட்டுக்கு வந்து, அன்றைய கல்லுாரி பாடங்களை படித்து முடித்து விட்டு தான் துாங்கச் செல்வேன். இப்படி நாங்களே கஷ்டப்படுவதால், ஓட்டல் வருமானம் அதிகரித்துள்ளது. கடன்கள் கொஞ்சம் தீர்ந்துள்ளன. வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும், போராடி ஜெயிக்கலாம் என்பதை என் அம்மாவைப் பார்த்து தெரிந்து கொண்டேன். கடன் இல்லாத வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE