சென்னை:''தமிழகத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி, 43 இடங்களில், தொடர்ந்து, 14 நாட்கள் காற்றின் தரம் கண்காணிக்கப்படும்,'' என, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலர், சந்தீப் சக்சேனா கூறினார்.
சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில், விழிப்புணர்வு பிரசார ஊர்திகளை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா கொடிஅசைத்து நேற்று துவக்கி வைத்தார். உடன் வாரிய தலைவர் வெங்கடாசலம், உறுப்பினர் செயலர் செல்வன் உடனிருந்தனர்.
அப்போது, கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா கூறியதாவது: சென்னையில், இரண்டு நாட்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், பிரசார ஊர்திகள் வாயிலாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை காலத்தில், சென்னையில், 15 இடங்களிலும், 14 மாநகராட்சி பகுதிகளில், தலா இரண்டு இடங்கள் என, 28 இடங்களை சேர்த்து, மொத்தம், 43 இடங்களில், காற்றின் தரம் குறித்து கண்காணிக்கப்படும்.சென்னையில் முக்கிய பகுதிகளில், நடமாடும் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையம் வாயிலாகவும் கண்காணிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE