வீடு வாங்குவோர்,விற்போருக்கு வரிச் சலுகை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வீடு வாங்குவோர்,விற்போருக்கு வரிச் சலுகை

Updated : நவ 14, 2020 | Added : நவ 12, 2020 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி : கொரோனா ஊரடங்கால் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்கும் வகையில், மூன்றாம் கட்டமாக, நேற்று ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, வீடுகள் வாங்குவோரும். விற்போரும் பயன் பெறும் வகையில், வரிச்சலுகை அளிக்கப்பட உள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச்சில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, நாடு
வீடு வாங்குவோர்,விற்போருக்கு வரிச் சலுகை

புதுடில்லி : கொரோனா ஊரடங்கால் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்கும் வகையில், மூன்றாம் கட்டமாக, நேற்று ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, வீடுகள் வாங்குவோரும். விற்போரும் பயன் பெறும் வகையில், வரிச்சலுகை அளிக்கப்பட உள்ளது.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச்சில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்தது. ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.

நிறுவனங்களும் கடும் பாதிப்புகளை சந்தித்தன. வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை மீட்கும் வகையில், மத்திய அரசு, பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது.
ஏற்கனவே இரண்டு கட்டங்களாக பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாம் கட்ட ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.


ரிசர்வ் வங்கி கணிப்புஇது குறித்து, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:நாட்டில் கொரோனா பரவல் குறையத் துவங்கிஉள்ளது. கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா பரவல் தடுப்புக்காக அமல்படுத்தப்பட்ட, நீண்டகால, கடுமை யான ஊரடங்குக்குப் பின், மத்திய அரசு பல தளர்வுகளை அறிவித்தது. மத்திய அரசின் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் வலுவான மீட்சியை அடைந்து வருகிறது. பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள், தெளிவாக தென்படுகின்றன. பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு உள்ளன. கடந்த ஏப்., முதல், ஆக., வரை அன்னிய நேரடி முதலீடு, 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்., மாதத்திற்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் தொகை, 1 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. எரிசக்தி நுகர்வு வளர்ச்சி, அக்டோபரில், 12 சதவீதமாக உயர்ந்தது. சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளின் எடை அளவு, 12 சதவீதத்திலிருந்து, ஆண்டுக்கு சராசரியாக, 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி குறித்து, ரிசர்வ் வங்கி, கணிப்பு ஒன்றைத் தெரிவித்துள்ளது.

அதில், 2020 -- 21ம் நிதியாண்டின், மூன்றாம் காலாண்டில், பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சிக்குத் திரும்பும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில், 68.6 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். வங்கியில் கடன் வழங்கும் அளவும், 5.1 சதவீதம் உயர்ந்துள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கான தனி இணையதளம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1.5 கோடி விவசாயிகளுக்கு, 'கிசான் கிரெடிட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது. 11 மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக, 3,621 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரி, 'ரீபண்டாக', 1.32 லட்சம் கோடி ரூபாய், 39.7 லட்சம் பேருக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. மாநில மின் நிறுவனங்களுக்கு, 1.18 லட்சம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது.
'பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம், கடந்த ஆண்டு, மார்ச், 31 வரை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம், மூன்று ஆண்டுகள் வரை அமலில் இருக்கும்' என, எதிர்பார்க்கிறோம்.


மானிய திட்டம்பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக, 2.65 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, மூன்றாம் கட்ட ஊக்குவிப்பு திட்டங்கள், இன்று அறிவிக்கப்படுகின்றன. புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், தற்சார்பு இந்திய வேலை வாய்ப்பு திட்டத்தை ஊக்குவிப்பதற்கும், இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தில் மானிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்தவர்களும், மார்ச், 1 முதல், செப்., 30 வரை, 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி வேலை இழந்தவர்களும், அக்., 1க்கு பின் வேலையில் சேர்ந்தவர்களும், இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இதன்படி, பி.எப்., திட்டத்தில், பணியாளர்கள் பங்களிப்பாக, 12 சதவீதம், நிறுவனம் பங்களிப்பாக, 12 சதவீதம் என மொத்தம், 24 சதவீத தொகை,
நிறுவனங்களுக்கு மானிய மாக வழங்கப்படும். இந்தத் திட்டம், அடுத்த ஆண்டு ஜூன், 30-ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.அவசரகால கடன் உறுதியளிப்புத் திட்டம், ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தத் திட்டம், மார்ச், 31- வரை நீட்டிக்கப்படுகிறது.


பிணையில்லா கடன்இந்தத் திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு, பிணையில்லாக் கடன் வழங்கப்படும்.கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்காக, உயிரி தொழில்நுட்பத் துறைக்கு, 900 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்க, 65 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். வீடுகள் வாங்குவோருக்கும், விற்பவருக்கும் பயனளிக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட உள்ளது. இதன்படி, 2 கோடி ரூபாய் வரை வரிச்சலுகை அளிக்கப்படும். இதுவரை, அரசு விலைக்கும், ஒப்பந்தத்தில் உள்ள விலைக்கும், 10 சதவீத வேறுபாடு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. அடுத்த ஆண்டு, ஜூன், 30 வரை, இந்த வேறுபாடு, 20 சதவீதம் வரை அனுமதிக்கப்படும். இதனால், வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது.

நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை மேம்படுத்த, 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஊரக பகுதியில் வேலைவாய்ப்பை அதிகரிக்க கூடுதலாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
இதைத்தவிர, உள்நாட்டுப் பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்துறை ஊக்கத்தொகை, உள்கட்டமைப்பு, பசுமை எரிசக்தி ஆகியவற்றுக்கான மூலதனம் மற்றும் தொழில்துறை செலவினங்கள் போன்றவற்றுக்காக, 10 ஆயிரத்து, 200 கோடி ரூபாய், கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க, மத்திய அரசு, இதுவரை, 30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களை அறிவித்துள்ளது.


விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கைமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது:சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அந்தப் பொருட்களை பாதுகாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை, அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால் தான், பண்டிகை காலத்தில், பருப்பு போன்ற பொருட்களின் விலை
பெருமளவில் உயரவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X