சென்னை:சென்னை, யானைக்கவுனி துப்பாக்கி சூடு சம்பவத்தில், 5 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தராததால், மனைவியே, தன் கணவர் மற்றும் அவரது பெற்றோரை, கூலிப்படையுடன் சென்று, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தகவல் வெளியாகி உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படை போலீசார், புனே விரைந்துள்ளனர்.
சென்னை, சவுகார்பேட்டை, விநாயக மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலித் சந்த், 74. அவர் மனைவி புஷ்பா பாய், 70. இவர்கள் மகன் ஷீத்தல், 40. மூவரும், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்தனர்.
திருப்பம்
தலித்சந்தின் மகள் பிங்கி, பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தினமும், தந்தை வீட்டிற்கு இரவு நேரத்தில், உணவு கொண்டு செல்வது அவரது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு, உணவு கொண்டு சென்ற போது, கதவு வெளியில் தாழிடப்பட்டுஇருந்தது.பிங்கி, தாழை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில், தந்தை, தாய் மற்றும் சகோதரர், துப்பாக்கியால் சுடப்பட்டு, ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
இதைக்கண்டு, பிங்கி அதிர்ச்சியடைந்தார். உடன், யானைகவுனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயரதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தினர்.மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மூவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், மூவருக்கும், நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது தெரியவந்தது.'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஒரு பெண் உட்பட, ஆறு பேர் கும்பல், இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. அதன் பின்பே, போலீசாரின் பார்வை, ஷீத்தலின் மனைவி பக்கம் திரும்பியது.
தப்பித்தனர்
ஷீத்தலுக்கும், புனேயைச் சேர்ந்த ஜெயமாலாவிற்கும் திருமணமாகி, இரு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து, ஷீத்தல் சென்னையில் பெற்றோருடனும், ஜெயமாலா, குழந்தைகளுடன் புனேவில் உள்ள தாய் வீட்டிலும் வசித்து வந்தனர்.ஜெயமாலா, விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு தொடுத்த வழக்கு, புனே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, செப்., 29ல், ஜெயமாலாவின் சகோதரர்கள், கொரோனா பாதுகாப்பு உடையணிந்து, மாறுவேடத்தில், ஷீத்தலின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, தங்கை மற்றும் அவரது குழந்தைகளுக்கு, 5 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு, சண்டையிட்டுள்ளனர்.வாக்குவாதம் முற்றவே, ஷீத்தல் மற்றும் அவரது குடும்பத்தை கட்டிப்போட்டு, சரமாரியாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி உள்ளனர்.
அதேபோல, ஜெயமாலா, அக்., 21ல், கணவர் வீட்டிற்கு வந்து, 5 கோடி ரூபாய் கேட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார். இவ்விரு சம்பவங்கள் குறித்தும், யானை கவுனி போலீசில் கொடுத்த புகார் மீதான விசாரணை, நிலுவையில் உள்ளது.
நடவடிக்கை
இந்நிலையில் தான், மூன்றாவது முயற்சியாக, நேற்று முன்தினம், ஜெயமாலா தன் சகோதரர்கள் இருவர், மேலும், மூவர் உட்பட ஆறு பேருடன் சென்று, கணவர், மாமனார், மாமியாரிடம், பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.இதில், தகராறு ஏற்பட்டு, ஜெயமாலா கும்பல், ஷீத்தல், தலித் சந்த், புஷ்பா பாய் ஆகிய மூவரையும், துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு கொலை செய்து விட்டு, புனேவிற்கு ரயிலில் தப்பியது தெரியவந்தது.
அந்த கும்பலை பிடிக்க, தனிப்படை புனே விரைந்துள்ளது. மேலும், அம்மாநில போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு, கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யானை கவுனியும், துப்பாக்கி சூடும்!
யானை கவுனியில் துப்பாக்கி சூடு நடப்பது இது முதன் முறையல்ல. கடந்த, 2011 ஆக., 2ல், எலக்ட்ரிக்கல் மொத்த வியாபாரி ஆசிஷ் சர்மா, 50, தங்கும் விடுதியில், மர்மமான முறையில், சுட்டுக் கொல்லப்பட்டார். பின், உறவினரே, கொலை செய்தது அம்பலமானது.
அதேபோல, 2016 மே, 3ல், டிராவல்ஸ் அதிபர் பாபுசிங் என்பவரை, பட்டபகலில் சுட்டுக் கொன்ற, புனேயைச் சேர்ந்த கூலிப்படை தாதா ராகேஷ் என்பவனை, 25 நாட்கள் கழித்து, காவல் துறை கைது செய்தது. தற்போது, மூன்றாவது முறையாக துப்பாக்கியால் சுடப்பட்டு, மூவர் கொலையாகி இருப்பது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE