புதுடில்லி: ''சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள், மக்களிடம் தேசபக்தியை வளர்க்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், சுவாமி விவேகானந்தர் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று திறந்து வைத்து பேசியதாவது:சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும், செயல்களும், நமக்கு எப்போதும் உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்கின்றன. அவரது சிந்தனைகளை படித்தால், மக்களிடம் தேசபக்தி அதிகரிக்கும். அவரது சிலை திறக்கப்பட்டதால், இந்த பல்கலையில் படிக்கும் மாணவர்களிடம், நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற சிந்தனை ஓங்கும். வலிமையான, வளர்ச்சி யான இந்தியாவை உருவாக்க, சுவாமி விவேகானந்தர் கண்ட கனவும் நனவாகும்.சுயசார்பை நோக்கி, நாடு இப்போது வேகமாக முன்னேறி வருகிறது. 130 கோடிக்கும் அதிகமான மக்களின் விருப்பப்படி, சுயசார்பு இந்தியா விரைவில் உருவாகும். இவ்வாறு, மோடி பேசினார்.
பாரம்பரிய உறவு
தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின, 'ஆசியான்' மாநாடு, கொரோனா பரவல் காரணமாக, இந்தாண்டு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று துவங்கியது.
இந்த அமைப்பின் சிறப்பு அழைப்பாளர் என்ற அடிப்படையில், இந்தியாவும், இந்த மாநாட்டில் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், நேற்று நடந்த மாநாட்டுக்கு, பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமர் நுயன் சுவான் புக்கும் தலைமை தாங்கினர். இதில், பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையிலான உறவு பாரம்பரியமிக்கது. வர்த்தகம், டிஜிட்டல், கடல்வழி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், ஆசியான் - இந்தியா இடையிலான உறவு, கடந்த சில ஆண்டுகளில் நெருக்கமாகியுள்ளது. இதை, மேலும் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE