சென்னை:விஜய் மக்கள் இயக்கத்தில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவாளருக்கு மிரட்டல் வருவதாக, புகார் கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் பெயரில், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், புதிய கட்சியை பதிவு செய்தார். இதனால், விஜய்க்கும், அவரது தந்தைக்கும் இடையே மோதல் உருவானது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தில், அதிரடி மாற்றங்களை விஜய் செய்துள்ளார். தற்போது, விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளராக, புஸ்ஸி ஆனந்து உள்ளார். இவரது மேற்பார்வையில், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவாளர்கள் பலர் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விஜய் மக்கள் இயக்க பெயர், கொடி மற்றும் படத்தை பயன்படுத்த, மேலிடத்தின் அனுமதி பெற வேண்டும் என, விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவராக இருந்த, திருச்சி ராஜா என்கிற பத்ம நாபன், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:ஒரு வாரத்திற்கு முன், விஜய் மக்கள் இயக்கத்திற்கு, என்னை மாநில தலைவராக, எஸ்.ஏ.சந்திரசேகர் நியமித்தார். அன்று முதல் எனக்கு நெருக்கடி அதிகமானது.
இதுவரை திருச்சியில், என் மீது எந்த வழக்கும் இல்லை. ஆனால், என் வீட்டுக்கு, 10க்கும் மேற்பட்ட போலீசார் வந்து சென்றுள்ளனர். இதனால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில், புஸ்ஸி ஆனந்து பொறுப்பாளராக உள்ளார். அவரது துாண்டுதல் காரணமாகவே, எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. என் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அவர் தான் பொறுப்பு.இவ்வாறு, பத்மநாபன் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE